Sunday, December 23, 2007

க‌ண்ணீருட‌ன் - என் இத‌ய‌ அஞ்ச‌லி...
2004 டிசம்பர் 27 காலை....

மாவட்ட ஒட்டு மொத்த நிர்வாகமே குளச்சலில் இறந்து போன 540 பேர்களை அடக்கம் செய்வதற்காக குழுமியிருந்தனர்...

அன்றைய பத்திரிகை செய்திகளைப் படிக்கும் போது மிக பயங்கரமாக இருந்தது. தெற்காசியா முழுவதுமாக சுனாமி துவம்சம் செய்து அழித்து போட்டிருந்தது என,நாகர்கோவிலிருந்து 14கிமி தொலைவில் உள்ள மணக்குடி என்ற கடற்கரை கிராமத்தில் சுனாமி தன் முழு தாக்குதலையும் அரங்கேற்றியிருந்தது.

அந்த அழிவுகளை பதிவு செய்ய அங்கே சென்றேன் கிராமத்துக்குள்ளே நுழையவே முடியவில்லை நுழைவுப் பகுதியில் சமீபத்தில் புதியதாக கட்டியிருந்த [மணக்குடியையும் கீழமணக்குடியையும் இணைக்கும் ] பாலத்தையே காணவில்லை,நான்கு கான்கிரிட் துண்டுகளை இணைத்து அந்த பாலம் கட்டியிருந்தனர்.அதில் இரண்டு துண்டுகளை இன்று வரை காணவில்லை, சுனாமி அலைகளின் வேகத்தை அந்த பாலத்தின் அழிவில் உணரமுடிந்தது.


அடுக்கு மாடி வீடுக‌ளை த‌ரைம‌ட்ட‌மாக‌ ஆக்கி போட்டிருந்த‌து சுனாமி,ஒரு க‌ட்டும‌ர‌த்தை தூக்கி உய‌ர‌மான இர‌ண்டு மாடி க‌ட்டிட‌த்தின் மேல் வைத்திருந்த‌து அலைக‌ள். சுனாமி அலைகள் சுமார் மூன்று முறை ஊரை நோக்கி சீறிவ‌ந்துள்ளது,கும‌ரி மாவ‌ட்ட‌த்திலேயே சுனாமியின் அதிக‌ப‌டியான‌ தாக்குத‌லுக்கு உள்ளான இடம் ம‌ண‌க்குடி, கீழ்ம‌ண‌க்குடி கிராமங்கள் தான்.அங்கிருந்த‌ காவ‌ல் துறையின‌ர் செய்வ‌த‌றியாது திகைத்து நின்ற‌ன‌ர் கார‌ண‌ம் ஊர் முழுவதும் இற‌ந்த‌வ‌ர்க‌ளின் ச‌ட‌ல‌ங்க‌ளாக‌ சித‌றிகிட‌ந்த‌து,அந்த உட‌ல்க‌ளை அட‌க்க‌ம் செய்ய‌ வேண்டும் ஆனால் அவ‌ர்க‌ளை அடையாள‌ம் செல்ல‌ யாரும்மில்லை.சுனாமியின் சீற்ற‌த்தினால் இற‌ந்த‌வ‌ர்க்ளின் உட‌ல்க‌ளையும்,உட‌மைக‌ளையும் அப்ப‌டியே அங்கேயே விட்டுவிட்டு உயிர் த‌ப்பி சென்றிருந்த‌ன‌ர் ஜ‌ன‌ங்க‌ள்.அங்கு சென்ற‌ நான் இற‌ந்த‌வ‌ர்க‌ளை ஒவொருவ‌ரையும் நான் கேமிராவில் ப‌திவு செய்து கொள்கிறேன் பின்பு அடையாள‌ம் காண‌ அவை ப‌ய‌ன்ப‌டும் என்றேன்.இர‌ண்டு காவ‌ல‌ர்க‌ள். நான் மற்றும் இர‌ண்டு ந‌ப‌ர்க‌ள்.அந்த‌ ஊரின் பாதிரியார் ஆகியோர் தயாராகி கிள‌ம்பி சென்றோம்.
உள்ளே செல்ல‌ பாதைக‌ள் சீர‌ழிந்து கிடந்ததால் முள்காடுக‌ளின் வ‌ழியே நுழைந்து சென்றோம்.உடைந்த‌ வீடுக‌ளின் க‌த‌வுக‌ளில் வைத்து உட‌ல்க‌ளை தூக்கி வ‌ந்த‌ன‌ர் அந்த‌ இருவ‌ரும்,ஊரின் மையாவெளியில் உட‌ல்களை சேக‌ரித்து வைத்தோம், நான் ஒவ்வொரு உட‌ல்க‌ளையும் முழுவ‌துமாக‌வும்,முக‌த்தை ம‌ட்டும் க்ளோச‌ப்பாக‌வும் இரு ப‌ட‌ங்கள் என‌ ப‌திவுக‌ள் செய்துகொண்டேன். அருகில் நின்ற‌ காவ‌ல‌ர்க‌ள் இற‌ந்துபோன‌வ‌ர்க‌ள் அணிந்திருந்த‌ உடைக‌ளின் நிற‌ம்,அங்க அடையாள‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றை குறிப்பெடுத்துகொண்ட‌ன‌ர்.முக‌ங்க‌ளை திருப்பி வைத்து ப‌ட‌ம் ப‌திவு செய்யும் போது வாய்க‌ளிலிருந்து நுரை த‌ள்ளியது. க‌ட‌ல் நீர் குடித்தே இற‌ந்து போயிருந்த‌ன‌ர்,சில‌ர‌து முக‌ங்க‌ள் அடிப‌ட்டு சிதைந்திருந்த‌து இர‌த்த‌ம் வ‌டிந்த‌து.இற‌ந்து போய் ஒரு நாள் ஆன‌தால் லேசாக‌ வாடை வீச‌ தொட‌ங்கியிருந்தது.அதிலும் என் ம‌ன‌தை மிக‌வும் ர‌ண‌மாக்கிய விச‌ய‌ம் எந்த‌ பாவ‌மும் அறியாத‌ பிஞ்சு குழ‌ந்தைக‌ளின் முக‌ங்க‌ளை பட‌ப்ப‌திவு செய்யும் போது ஏற்ப‌ட்ட‌து என் விழிக‌ளின் நீர் வ‌டிந்தோடிய‌து,உள்ளம் நொறுங்கிபோன‌து.ஊரே அழிந்து கிட‌ந்த‌தால் குடிப்பத‌ற்கு கூட‌ த‌ண்ணிர் கிட்ட‌வில்லை எம‌க்கு,கையுரையும்,முக‌த்தில் க‌ட்ட‌ மாஸ்க்கும் இல்லாம‌லே எங்க‌ள‌து ப‌ணி தொட‌ர்ந்தோம்.பொக்க‌லைன‌ர் வ‌ர‌வ‌ழைக்கப‌ட்டிருந்தது. அத‌ன் மூல‌ம் ஒரு பெரிய‌ குழி தோண்டி அன்று முழுவ‌தும் நாங்க‌ள் சேக‌ரித்த‌ உட‌ல்களை ஒட்டு மொத்தமாக குழிக்குள் இழுத்து போட்டு அடக்கம் செய்தோம்.க‌ண்க‌ளை முடி பிராத்தித்தேன். இறைவா இவ‌ர்க‌ளின் ஆன்மாவிற்கு இளைப்பாருதலை கொடும் என்று,பொக்க‌லைன‌ர் ஓட்டி வ‌ந்த‌வ‌ரை பார்த்தேன் சபரிமலைக்கு மாலையணிந்திருந்தார் அவ‌ரும் இருக்கையில் அம‌ர்ந்த‌வாரே கைக‌ளை குவித்து வேண்டிக்கொண்டிருந்தார். சுனாமி ம‌த‌ம்,சாதி அத்த‌னையும் க‌ட‌ந்து ம‌னித‌ ம‌ன‌ங்க‌ளை இணைத்து போட்ட‌து.உத‌வும் க‌ர‌ங்க‌ளை கொண்டு சேர்த்திருந்த‌து.
என்னுள்ளே...ஒரு வித‌ ஆத்ம‌ திருப்தி. நான் செய்கின்ற‌ தொழில் மூல‌மாக கருவி முலமாக‌ இந்த‌ ச‌முதாய‌த்திற்ககு பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின்பும் மூன்று நாடகள் தொடர்ந்து உட‌ல்க‌ளை அடையாள‌ம் காணும் ப‌ணிக்காக என்னை ஈடு ப‌டுத்திக்கொண்டேன்....
தொட‌ர்ந்து 28 நாட்க‌ள் சுனாமி தாக்குத‌லுக்கு உள்ளான‌ க‌ட‌ற்க‌ரை கிராம‌ங்க‌ளிலேயே சுற்றி வ‌ந்து என‌து ப‌ட‌ப்ப‌திவுக‌ளை செய்தேன்,
என‌து ப‌திவுக‌ளையெல்லாம் க‌ண்காட்சியாக‌ க‌ண்ணீருட‌ன் என்ற‌ த‌லைப்பில் புகைப்ப‌ட‌க‌ண்காட்சிவைத்து அதில் கிடைத்த‌ ரூபாய் 20000 ஆயிர‌ங்க‌ளை முதல‌மைச்ச‌ரின் சுனாமி நிதிக்கு அளித்து ம‌ன‌நிறைவு பெற்றுக்கொண்டேன். வ‌ருகின்ற‌ டிச‌ம்ப‌ர் 26 2007 மூன்றாவ‌து நினைவு நாளில் சுனாமியில் இறந்துபோன‌ அத்த‌னை உள்ள‌ங்க‌ளுக்கும் என் இத‌ய‌ அஞ்ச‌லி...

Wednesday, December 12, 2007

மீண்டும் கண்ணீருடன்‍‍ 2004 சுனாமி


2004 டிசம்பர் 26 காலை 9।30 மணி.....

எனது புகைப்படப் பதிவுகளை பணி முடித்து திரும்புகிறேன்...

ஏய் ஓடுங்க... ஓடுங்க... கடலு உறப்பாகிடக்கு, எங்கும் ஒரே கூக்குர‌ல், புழுதிப‌ற‌க்க‌ ம‌க்க‌ள் ஓடுகிறார்க‌ள்...

நானும் ப‌ற‌க்கிறேன் என‌து பைக்கில், க‌டியப்ப‌ட்டிண‌ம் என்கிற‌ கும‌ரி மாவ‌ட்ட‌ க‌ட‌ற்க‌ரை ஊர் சாலையில்... இரத்தம் சூடாகி இதயம் பட‌படப்பாகி,கண்களில் மிரட்சியொடு பைக்கில் பறக்கிறேன்...மேட்டு பகுதியை நெருங்கும் வேளையில் அசுரத்தனமாக‌ வேகத்தோடு சுழன்று வந்த கடல் நீர் என்னை பைக்கோடு சூழ்ந்து கொண்டது, அடித்து ஒதுக்கியதில் ஒரு தொலைபேசி கம்பத்தை இறுக்கமாக சுற்றிபிடித்து கொண்டேன்.இறைவன் அருளால் உயிர் பிழைத்து இன்று உங்களேடு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்...ஐந்தே நிமிடங்களில் அந்த கடற்கரை ஜனங்களின் வாழ்வே தொலைந்து அடியோடு உருக்குலைந்து போய்விட்டது,ஐந்து நிமிடங்களில் அந்த ஊரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 44 பேர்கள்,என்னுள் உருவான ஒரு அசூரத்தனமான மனத்தைரிய‌த்தோடு கண்களில் கண்ட காட்சிகளையெல்லாம் பதிவு செய்கிறேன்,அத்தனையும் கோரக்காட்சிகள்,ஒரு புகைப்பட கலைஞனுக்கு இந்த சமுகத்தின் மேல் உள்ள பொறுப்புகளை உணர்ந்தவனாக சுனாமி என்கின்ற இயற்கை பேரழிவை, அதன் தாக்கத்தை, உடுக்க துணியின்றி உண்ண‌ உண‌வின்றி, கணப்பொழுதில் வீடுகளை இழந்து அகதிகளாகிப்போனவர்களை, உறவுகளை தொலைத்து தவிப்பவர்களை, மருத்துவமனை வளாகங்களில் வந்து குவியும் சடலங்களை, என பதிவுகளை செய்தேன்.

காலையில் 5 மணிக்கு நான் வீட்டிலிருந்து கிளம்பிய நான் அன்று வீடு திரும்பும்போது இரவு 12 மணி ஆகியிருந்தது।அன்று முழுவ‌தும் எதுவும் சாப்பிடவில்லை நான்.


விட்டில் என்னை சுற்றி பெரும்கூட்டம் எல்லாம் விசாரிப்புகள்.காரணம் அன்றைய மாலைமலர் பத்திரிகையில் கடல் அலையில் உயிர்பிழைத்த போட்டோகிராபர் என‌ எனது பேட்டி வெளியாகியிருந்தது.
இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை,கடல் அலையின் இறைச்சலும்,இடுப்புவரை சுழன்று வளைத்து அடித்த கடலின் வேகமும்,கண்களில் கண்ட கோரக்காட்சிகளும்,மனதில் ஓட தூக்கம்மின்றி புரண்டு புரண்டு படுத்துகிடந்தேன்।


தனியொரு ஆளாக 112 இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ததை அடுத்த இடுகையில்...

Thursday, December 6, 2007

டிசம்பர் மாத போட்டிக்கான படங்கள் -மலர்கள்

பூவுக்குள் ஒரு சூரிய உதயம்


பூவுக்குள் ஒரு விருந்து

மிக‌ அருமையான தலைப்பு மல‌ர்கள்

இத‌ழ்க‌ள் மீது ப‌டுத்தும், ம‌க‌ர‌ந்த‌ துக‌ள்களில் புர‌ண்டும், தும்பிக‌ள் குடிக்க‌யிருந்த‌ தேன் துளிக‌ளை அருந்தியும், வாசனையை நுகர்ந்து வந்த அனுபவம் எமக்கு...

கிடைத்த ஒரு சில மல‌ர்களை சரமாக தொடுத்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.
குமரியிலிருந்து ஜவஹர்ஜி...

நி பாதி நான்பாதி


இரட்டையர்கள்


பெயர் தெரியவில்லை‍ இருந்தலும் அழகுதான்

Monday, November 19, 2007

மீண்டும் ஜடமாகி மவுனமாகி போகிறேன்


இலங்கையில் தினம்தோரும் நடந்தேரும் தமிழ் இனப்படுகொலையின் உச்சக்கட்டம் சு.ப.தமிழ்செல்வன்- யை குண்டு வீசி அழித்தொழித்தது,

இந்த சம்பவம் சமாதான சமரச உடன்படிக்கை, மற்றும் மனித நேய செயல்களில் இலங்கை அரசு ஈடு படாது என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மனதில் வேதனையோடு எழுதுகிறேன், உள்ளத்தில் தோன்றும் உணர்வை உண்மையேடு வெளிக்கொனர முடிய வில்லை, உணர்வற்ற ஜடலமாக நான் மாறிப்போய்யுள்ளேன்।


இந்திய‌ அர‌சிய‌ல் நிக‌ழ்வுகளும்,கொள்கையும் நெறியுமில்லாத‌ அர‌சியில் வாதிக‌ள் மேற்கொள்கின்ற‌ முடிவுக‌ளும் என்னைப்போன்று ப‌ல‌ரையும் மாற்றிப்போட்டுள்ள‌து, நாங்க‌ள் முட‌மாகி கிட‌க்கிறோம்.


ப‌ள்ளி சிறுவ‌னாக‌ பாளையில் ப‌யிலுகியில் வகுப்பாசிரிய‌ர் அறிவித்தார் இல‌ங்கையில் யுத்தமாம் த‌மிழ் ம‌க்க‌ள் யுத்த‌த்தில் ம‌டிகிறார்கள் என்று, என் த‌மிழ் ச‌கோதிரிக‌ள் கற்பிழ‌க்கிறார்க‌ளாம், உடுக்க‌ உடுதுணியின்றி வ‌ருமையில் வாடுகிறார்க‌ள் என்று.
வீட்டில் அம்மாவிட‌ம் கேட்டு நிறைய‌ துணிக‌ளை கொண்டு சென்று வ‌குப்பாசிரியரிட‌ம் கொடுத்தேன் என்னைப்போல் நிறைய‌ ச‌க‌ மாண‌வ‌ர்க‌ள் தூணிம‌ணிக‌ளை கொண்டு வ‌ந்து சேர்த்திருன‌ர்। அந்த‌ வ‌ய‌தில் அது ஒரு ம‌ன‌ நிறைவு தந்த‌து।


பின்பு உயர்நிலைப்பள்ளி பயிலும் வேளை நாங்கள் குமரிக்கு மாற்றலாகி வந்திருந்தோம். அப்போது இலங்கையில் பயங்கர யுத்தம் நடந்து கொண்டிருந்த்தது. நாகர்கோவில் குளத்து பஸ்ஸ்டாண்ட் அருகில் ஒரு ஓலைக் கொட்டகையில் தமிழ் ஈழ விடுதலைப் போரின் யுத்தக் காட்சிகள், மற்றும் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் பயிற்சி பெறும் காட்சிகள், புகைப்படங்களாக கண் காட்சி வைத்திருந்தனர். அத்தனையும் வேதனைக் காட்சிகள். யுத்தப் படங்களைப் பார்த்து கண் கலங்கினேன். ஓலைக் கொட்டகையின் வெளியில் விடுதலைப் புலிகள் உண்டியல் குலுக்கி பணம் பெறுவதைக் கண்டேன். அன்று பஸ்ஸில் செல்வதற்க்கு என்னிடம் இருந்த இருபத்தியைந்து பைசாவை உண்டியலில் போட்டு என் உணர்வை வெளிப்படித்திக்கொண்டேன்.என்னைப் போல் பலருக்கும் இதுப் போன்ற உணர்வை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் தமிழகத்தில் பலருக்கும் அன்றைய‌ நேரம் ஏற்பட்டிருக்கும்.
இலங்கையில் தமிழ‌ர் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிகின்றது, உணவின்றி சாவு நிக‌ழ்கின்றன, என்ற தகவல் இந்தியாவுக்கு வர இந்திய ராணுவம் இங்கிருந்து உணவுகளை விமானத்தில் எடுத்து சென்று தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வீசுகின்றது என்றவுடன் நாங்கள் அடைந்த மகிழ்விற்கு எல்லையே கிடையாது.
இல‌ங்கை ஈழத்தமிழர் பிரச்னை எங்களோடு இறண்டற கலந்து விட்ட ஒன்றாகும். இன்றும் எங்களுக்குள்ளே வேரூடூருவிக்கிடக்கிறது . போரில் அத்தனையும் இழந்த நம் மக்கள் அகதிகளாக இந்திய மண்ணில் திரும்பி வந்து வாழ்கின்றனர். சொந்தமண்ணிலேயே அகதிகளாகப் பாவிக்கப்பட்டு அகதி முகாம்களில் அடைப்பட்டுக்கிடக்கிறார்கள்। இதிலும் வேதனை இந்திய அரசு வழங்கும் சொற்ப்ப சவுகரியங்களுடன் நலிந்து போய் வாழ்கின்றனர்.


என்று அந்த மண்ணில் போர் நிறுத்தங்களும், சமாதான வாழ்க்கையும் நிலவப் போகிறது। என்று அந்த மண்ணில் தமிழ‌ர்களுக்கு சுதந்திரம் கிடைத்திடப்போகிறது, என்று அந்த மண்ணில் வெள்ளைக் கொடிப் பறக்கபோகிறது, என்று அந்த மண்ணில் சமாதானப் புறா பறக்கப் போகிறது, என்று யுத்த கரு மேகங்கள் கலைந்து புதியதோர் விடியலாக தமிழ் ஈழம் பிறந்திடப் போகிறது.
விடுதலைக்காக தன் உயிர் ஈந்த என் சகோதர சகோதரிகளுக்கு என் கண்ணீர் அஞசலி.

இந்திய தமிழ் மண்ணிலிருந்து பிராத்திக்கிறேன்.

மீண்டும் ஜடமாகி மவுனமாகிப் போகிறேன்।

Wednesday, November 7, 2007

நவம்பர் மாத போட்டிக்கு - சாலைகள்

வெறும் சாலைகளை பதிவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை எனவே அன்றாடம் நாம் காணும் காட்சிகளையும் சேர்த்து பதிவு செய்தேன்.இந்த மாதிரியான சவாரியில் தான் நம் மக்களுக்கு ராக்கெட்டில் போவது போன்று திரில் பாருங்கள்.
நெல்லை மாவட்டத்தில் பதிவு செய்தது மனதில் சுமையாகயிருந்தது, தலையில் சுமை கால்களில் வேகம்
யானை படம் போட்ட பஸ் [கேரளா பஸ்] எதிரில் வருகிறது என்றால் மேக்ஸிமம் லெப்ட் எடுத்து விடுங்கள் இல்லை எனில் நிலமை இப்படிதான்.
ஓடு களம் இல்லாத நம் கிராமங்களில் நம் சிறுவர்கள் ஒலிம்பிக் கணவுகளோடு !!!
சாலை நமக்கு மட்டும் சொந்தமில்லை விருமாண்டிகளுக்கும் தான் அன்றாடம் நம்மோடு பயணிப்பவர்கள்.இவருக்கு இதுதான் பார்க்கிங் ஏரியா.

Tuesday, November 6, 2007

கோடாறிக‌ளின் முனை ம‌ழுங்க‌ட்டும்


நாகர்கோவிலிருந்து திருவன‌ந்தபுரம் நெடுஞ்சாலையில் பயணப்படும் போது நான் கண்ட காட்சி இது, மொட்டைய‌டிக்க‌ப‌ட்ட‌ ஒரு வேப்ப‌ம‌ர‌த்தின் நுனிப்ப‌குதிக‌ளில் ச‌ட்டிபானையை தொப்பி போன்று க‌விழ்த்து வைத்திருந்தார்க‌ள் வேடிக்கையாக‌வும் வினோத‌மாக‌வுமிருந்தது।


சுங்கான்க‌டை என்கின்ற‌ அந்த‌ ஊர் ம‌க்க‌ளிடம் விபரம் கேட்டேன், விசாயிக‌ளும் ம‌ண்பாண்ட‌ம் செய்யும் தொழில் செய்பவர்களும் அதிக‌ம் வ‌சிக்கிறார்க‌ள் இங்கே। வேப்பம் ம‌ர‌த்தின் இலைக‌ளை முறித்து வ‌ய‌லுக்கு உர‌மாக‌ இடுவார்க‌ளாம் அத‌ன் பின்பு மொட்டைய‌டிக்க‌ப‌ட்ட‌ அந்த‌ ம‌ர‌ம் வெயில்ல‌டிப‌ட்டு ப‌ட்டு விட‌ கூடாது என இந்த‌ முன்னேற்பாடாம்.


ந‌க‌ர் புற‌ங்க‌ளில் வீடுக‌ள் க‌ட்ட‌ ம‌ர‌ங்க‌ளை முறித்து அழிப்ப‌தும்,வீடுக‌ளின் அழ‌கை ம‌ர‌ம் ம‌றைக்கிற‌து என‌ வெட்டி எறிவ‌து அன்றாட‌ம் ந‌ட‌க்கிற‌து, இது ப‌டித்த‌ நாக‌ரிக‌ ம‌னித‌ர்க‌ள் செய்யும் செய‌ல்.


பாருங்க‌ள் கிராம‌த்தில் ப‌டிக்காத‌ பாம‌ர‌ விவ‌சாயிக‌ளின் அறிவை,இய‌ற்கையை அவ‌ர்க‌ள் நேசிக்கிறார்க‌ள்,இய‌ற்கையோடு ஒன்றித்த இசைந்த வாழ்வு வாழ்கிற‌ர்க‌ள். மண்ணை நேசிக்கும் இவ‌ர்க‌ள் நாம் வாழ‌ இவ‌ர்க‌ள் உழைக்கிறார்க‌ள்.


இனியேனும் வீட்டுக்கு ஒரு ம‌ர‌ம் ந‌ட‌வில்லை என‌றாலும் ப‌ர‌வாயில்லை, இருக்கும் ம‌ர‌த்தையாவ‌து வெட்டி எறிய‌கூடாது என‌ முடிவுக்குவ‌ருவோம்.


Friday, October 19, 2007

ஊர் சுத்தலாம் வாங்க!

சமீபத்தில் மதுரைக்கு போனபோது மீனாட்சி அம்மன் கோவிலின் சுற்றுபிரகாரத்தில் கண்ட காட்சி இது...படர்ந்து விரிந்து வளர்ந்திருந்தது. மனிதர்கள் மேல் பயத்தை பாருங்கள்,என்னை வெட்டிவிடாதீர்கள் என எழுதிவைத்திருந்தார்கள். மனிதர்களே பிளீஸ் வெட்டிவிடாதீர்கள்....முடிந்தால் வீட்டுக்கு ஒரு மரம்நட முயற்ச்சிப்போம்.
குமரி மாவட்டத்தில் களியல் நீர் பிடிப்பு பகுதியில் கண்ட காட்சி இது... மீனவர் ஒருவர் சுருக்குவலை கொண்டு மீன்பிடித்த லாவகம்.

நண்பர்களோடு மூணார் போயிருந்தோம்...இரு மரங்களின் உச்சியில் பறவையின் கூடு இது. உயர உயர பாதுகாப்பு மனிதர்களுக்குமட்டும்தான்.


பிரபல பத்திரிகையின் கோலப்போட்டியில் கண்ட காட்சி இது...அந்த காலங்களில் வீட்டின் வாசல்களில் அரிசி மாவுகொண்டுதான் கோலம்மிடுவார்களாம் நம்மவர்கள், காரணம் அரிசி மாவு எறும்புகளுக்கு உணவாக பயன்படும் என்றுதான். அணில்கள் தின்ற இந்த கோலம் எனக்கு பிடித்திருந்தது.


கிராமத்தின் சாலையில் சிறுவர்களின் உற்ச்சாக துள்ளல் ஓட்டம் இது....எல்லா விதத்திலும்இந்த டாப்கியர் ஓட்டமிருந்தால்தான் இன்றைய காலத்தின் நாகரிக வேகத்திற்க்கு ஈடாக இவர்களால் வர இயலும் என மனதில் பட்டது.சாலையில் வேலியில் படர்ந்திருந்த கொடியில் பூத்திருந்த பூ இது... பார்வையில் வானத்திலிருந்து ஒரு பேராசூட் இறங்கி வந்தது போலிருந்தது.திருமண வீட்டில் கண்ட் காட்சியிது.... பள்ளி பாடபுத்தகம் தூக்க வேண்டிய வயதில் சாக்ஸபோண் பிடித்து இசைக்க வந்திருந்தாள், சிறார்பணியாளர் படி குற்றமாகாதா இது!ஒரு பெரிய மாமரம் ஒய்யாரமாக சாய்ந்து படுத்து கிடந்தது ஒரு கல் வீட்டின் மேல்.... சுகமான சுமைபோலும்.ஜன்னல் வழி கண்ட காட்சியிது... குட்டி பூனையை பதுகாப்பாக கவ்வி துக்கி தாவியது தாய்.
கூடன்குளத்திலிருந்து திருச்செந்தூர் போகும் சாலையில் இந்த காட்சியை பதிவு செய்தேன்.....பெண்களின் தலையில் விறகு பாரம், கால்களில் வேகம், இந்த விறகுகள் சமையலுக்கு எரிக்கவா? இல்லை வயிற்று பாட்டை கழிக்க வியாபாரத்திற்காவா ? அணுவுலையிலிருந்து நாட்டுக்கு எரிசக்த்தி கிடைக்கபோகிறதாம்!!! ஆண்டவன் அருள்பாலிக்கட்டும்......அடுத்த நூற்றாண்டில் இந்த கருவேலம் மரங்களாவது மனிதர்களுக்கு மிஞ்சுமா என்று மனதில் கேள்வி எழுந்தது என்னுள்.

Thursday, October 18, 2007

கொலைக்குடில் - பிரமீடு


நதியில் மடி சுரண்டி
மணல் வந்தது


பர்வத உடல்சிதைத்து
கல் வந்தது


வணம் அறுத்து
கதவும் ஜன்னலும் வந்தது


புவித்தாயின் மார்பில்
துளையிட்டு உறிஞ்சியதில்
நீர் வந்தது

வாஸ்த்து படி
வாணம் தோண்டினர்


இறந்துபோன இயறக்கைஉடல்
வின்முட்ட அடுக்கி
புது வீட்டில் கிரகப்பிரவேசம்...

Tuesday, October 9, 2007

வருணப்பொழிவு


தூரத்திலிருந்துபெரும் இரைச்சலோடு
நெருங்கி வியாபித்தது தூறல்
கருத்துபோன மேகங்கள்
தவழ்ந்து கடந்தன


வெளித்தேகத்தில்
மழைத்தூறல்களின் நகக்கீறல்கள்


சிதறிய மழைத்துளி
காற்றோடு உறவாடி அதனோடு
ஓடிப்போனது


கைவிரித்த மழை
முகம் மலர்ந்து
கமலமாக ஸ்பரிசம் கிளரச் செய்தது


செம்மண் தரையில்
சிவந்த ரத்த வழிசல்கள்
வடுக்களைத் தடம் பதித்தன


பூமியில் முகம் புதைத்த
விதைகள் முளைவிட முனைந்தன


நிலம் தழுவி கிடந்த வேர்கள்
இளகிப்போய் வான்நீர் அருந்தின


சருகையும் தளிரையும்
சுத்தமாக கழுவிப் போட்டிருந்தது


கிளைக் கைவீசி
குளிர் சாமரமானது மரங்கள்


உயரத்தில் ஈரக்குருவிகள்
ரெக்கை சிலுப்பி
கண்ணாடித் துகள்களாக சிதறியது


நீர்க்குமிழி கண்சிமிட்டி
தெப்பத்தில் வெடித்து மறைந்தது


அடிவானம் வெள்ளைக்கொடியசைத்து
தூறல் நிறுத்தியது


உதிர்ந்து போன
ஈசல் சிறகுகள் ஊர்வலம் போனது


கரகரத்த தவளை சத்தம்
நிசப்தம் கலைத்தது

Saturday, September 22, 2007

இறுதிக்கு யாருண்டு


போட்டோ - ஆனந்த்


பிறாயம் முதல்
உழைக்க ஆரம்பித்தது
மனைவியாய்
தாயாய்
தாதியாய்

வாழ்க்கை சுமை
கருப்பை சுமை
அத்தனையும் சுகமான சுமைகள்

உடம்பின் வலு
துயரங்களை துரத்தியது
பிள்ளைகள் ம்கிழ்வு
எனக்கு மனநிறைவு
இயன்றவரை இப்படியே
வாழ்ந்து விட்டேன்

பதியம் வைத்த செடியாய்
அவர்கள் வளர்ந்துவிட்டார்கள்
தூரத்தில் இன்று...

உடம்பு முழுக்க
அனுபவசுருக்கமும் முருக்கும்
தளர்ச்சியுமுண்டு

இறுதிவரை உழைத்து
வாழ்ந்திடுவோம்
கட்டையேறிடும்போதாவது
துணை வருமா உறவுகள்....

Saturday, September 8, 2007

மொழி-அச்சரம்

இளமையில் கல்- அவ்வை வார்த்தை - போட்டோ- ஆனந்த்
உழைக்கும் வர்க்கத்தின் பத்திரிக்கை படிக்கும் ஆர்வம்- அதற்க்கும் உதவி தேவை படுகிறது பருங்கள் !நாகரீகங்களும் கல்வி அறிவு எத்தனை தூரம் வளர்ந்தாலும் நம் இளையவர்களுக்கு ஜோசியத்திலும் அபார நம்பிக்கை பாருங்கள்


இன்று செப்டம்பர்-எட்டு உலக எழுத்தறிவு தினம்.

இதை மனதில் வைத்து நம்ம கேமிரவில் இன்னைக்கு ஏதாவது சிக்குதான்னு பாப்போம்னு கிளம்பினேன்.
ஒரு சில பதிவுகள் செய்ய முடிந்தது.......உங்க பார்வைக்கு வச்சிருகேன். நான் ரவுண்ஸ்ல இருக்கும் போது நன்பன் ஆனந்த் தொலைபேசியில் வந்தான் அவன்கிட்டேயியும் விவரத்தை சொன்னேன் உடனே அவனும் நானும் என்னுடைய பதிவை சுட்டு அனுப்பி வைக்கிறேன்னு கிளம்பிட்டான்.......

நண்பர் ஆனந்த் புகைப்படகலையில் மிக ஆர்வலர் இனி வரும் காலங்களில் அவருடைய பதிவுகளும் உலா வரும்.

தொழில் செய்ய நேரம் சரியாக இருப்பதால் எழுத நேரம் கிடைப்பதில்லை.

படங்கள் பற்றிய விமரிசனங்களை தவறாமல்
எமக்கு எழுதினால் மிக சந்தோம்...

Thursday, September 6, 2007

மஞ்சள் துணி பூதக்கிழவி


நெல்லை குமரி மக்களிடையே பெரும் பீதி!! மஞ்சள் உடை உடுத்திய வயதான கிழவி ஒவ்வொருவர் வீடுகளுக்கு வருவதாகவும், பிச்சைக் கேட்பதாகவும், பிச்சைக் கொடுத்தவர்கள் உடனடியாக மயங்கி ரத்த வாந்தி எடுத்து விழுகிறார்களாம். அதன் பின்பும் அந்த வீட்டில் பெரும் நோய்களும் எற்படுகிறதாம். இப்படி ஒரு வதந்தி செய்தி கிராமங்களில் மட்டுமில்லாமல் நகரப்பகுதிகளிலும் வீடுகளின் வாசல்களில் வேப்பிலையும், மஞ்சள் துண்டும் கட்டி தொங்க விட்டிருக்கிறதை காண முடிகிறது.


இது மாதிரியான புரூடா செய்திகளுக்கு நாட்டில் பஞ்சமில்லை போங்கள். எதை சொன்னாலும் நம்பி விட ஒரு கூட்டம் இருக்கிறது. நாகரீகங்களும், கணினி யுகங்களும், தொழில் நுட்பங்களும் எத்தனை வளர்ந்தாலும் பஞ்சமில்லாத இந்த மாதிரியான புரூடா கதைகளும் வலம் வருகின்றன.


காத்தாவது! கருப்பாவது!


பூதததை பார்க்க ஆசை உண்டா?

படத்தைப் பாருங்கள் சும்மா! அதுவும் புரூடா தான்.


Tuesday, September 4, 2007

வளர் பருவத்திலேயே
சமீபத்தில் எனது பணிக்காக பதிவு செய்ய நான் சென்றது பள்ளிகூடங்களுக்கு அதுவும் பெண்குழந்தைகள் பயிலும் பள்ளிகளில், யுனிசெப் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது. வளர்பருவ,வயது வந்த பெண்களுக்கான சுகாதார முறைகளை போதிப்பது.
பள்ளி வளாகத்தில் ஒதுக்குப்புறமான ஒரு அறையை தேர்வு செய்திருந்தனர் நிர்வாகத்தினர், மாணவிகள் கூட்டத்திற்க்கு வரும் வரை என்ன? எதற்கு? என்று கூட தெரியாது அவர்களுக்கு. கூடவே பயிலும் மாணவர்களுக்கு என்ன இவர்களுக்கு சொல்லி கொடுக்க அழைத்து செல்கிறாரென்று புதிர் போலும் வகுப்பறையின் வாசலிலும் ஜன்னலிலும் உத்து பார்த்துகொண்டு இருந்தனர்।
கூட்டத்திற்கு வந்தமர்ந்த அத்தனை மாணவிகள் முகங்களிலும் ஒரு வித மிரட்சியுடன் கூடிய நாணத்தை காணமுடிந்தது। நிகழ்ச்சியை நடத்துனர் ஆரம்பித்தார்----மாதவிடாய் காலத்தில் பெண்கள் கவனிக்க வேண்டியவை, சுகாதர அனுகுமுறைகள் என....அத்தணை பெண்பிள்ளைகளும் தலைகுனிந்துகொண்டனர்।பெண்ணுறுப்பு,ஜட்டி,நாப்கின்,சுத்தம் செய்தல் போன்ற வார்த்தைகளை நிகழ்ச்சி நடத்துனர்கள் உச்சரித்த உடன் கூட்டத்தில் மாணவிகள் உச் கொட்டி நாணிகோணினர்,பெரும்பான்மையினர் நாப்கின் பயன் படுத்துவது இல்லை என கூறினர், இந்த மாதிரியான செக்ஸ் போதனை தேவை என்றும் தயங்காது கூறியது ஆறுதலான விசயம்.
கூட்டத்தில் கல்ந்து கொண்டவர்களுக்கு இலவசமாய் ஒரு நாப்கின் வழங்கினார்கள் அதை ஆர்வமாய் வாங்கி மறைத்து வைத்துக்கொள்ள மாணவிகள் பிரயத்தனப்பட்டது வேடிக்கை. கூட்டம் நடத்துனர்களிடம் இனிவரும் காலங்களில் நாப்கினோடு மடக்கி வைத்துகொள்ள ஒரு பேப்பர் துண்டும் வழங்க வேண்டும் என நான் எடுத்துரைத்தேன்.
இந்த கூட்டதில் ஆணாக நான் மட்டும் இருந்ததால் என்னால் அவர்களுக்கு சங்கோஜம் வரக்கூடாது எனவெகு துரத்தில் நின்று கவனித்தவனாக, ஸூம்லென்சிலெயே பதிவுகள் செய்தேன்.
வளர் பருவ பெண்களுக்கு இந்த மாதிரியான போதனைகள் மிக அவசியம் என மனதில் பட்டது. மாற்றங்கள் வரப்போவது இனி நிச்சயம் தான்.

Wednesday, August 29, 2007

சண்டே ஸ்பெஷல்- அலையாத்தி பகுதி 3

அலையாத்தி சதுப்புநிலகாடு

குச்சி போன்ற அடிப்பகுதி

சண்டே ஸ்பெஷல்- அலையாத்தி பகுதி 2

கயலில் படகு
நீர் பறவைகள்