Wednesday, April 16, 2008

பண்ணா1


நெய்தல் நிலம் வேண்டும்

அதில் கொஞ்ச‌மேனும் நீட்டி ப‌டுத்திட‌நிழ‌ல் வேண்டும்
க‌ச்சான் தூர‌லில் ந‌னைந்திட‌ வேண்டும்
ம‌ண‌ல்வெளியில் புர‌ண்டு ச‌ற்றே க‌ண்ய‌ற‌ வேண்டும்
உள்ள‌ கும‌ற‌ல்க‌ளையும்
இற‌க்கி வைத்து ம‌ண்ணின்
ம‌ண‌ம் நுக‌ர்ந்திட‌ வேண்டும்.


பண்ணா1 =க‌ட்டு ம‌ர‌த்தை க‌ட‌ற்க‌ரையில் மூடிவைக்க‌ ப‌ய‌ன் ப‌டும் ஓலை குடிசை

விட்டாச்சு லீவு


பெரிய‌ லீவும் விட்டு
ப‌ள்ளிகூட‌ பெரிய‌ கேட்டில்
பெரிய‌ பூட்டும் போட்டாச்சு
புத்தகமும் கிழிஞ்சு போயி
கிழ‌ங்கு கார‌ன் கொண்டு போனான்
ப‌க‌ல் வெயிலும் எங்க‌ளோடு
மகிழ்ச்சியாக‌ க‌ட‌ல்குளிக்கும்

த‌க்கைம‌ர‌ம் சேர்த்துகெட்டி
ம‌ர‌ம் இள‌க்கி1 விளையாட்டு
க‌ட‌ம‌ர‌மும்2 தேவையில்லை
அணிய‌மும் 3 தேவையில்லை
க‌ம்பாலும்4 தேவையில்லை
சேப்பு வைக்க5 தேவையில்லை
பாய்விரிக்க‌ தேவையில்லை
யாத்தின‌மும்6 தேவையில்லை
ஒம‌லுகூட7 தேவையில்லை
சேக்காளி8 நீங்க‌ ம‌ட்டும்கைகோத்து
வந்தாலே போதுமடா

அலை ம‌டிப்பில் தாவிகுதித்து
த‌லையெல்லாம் ம‌ண‌லாச்சு
அலைக்க‌ரையில் கிளிஞ்ச‌ல்
பொறுக்கிமாலையாக‌ கோர்த்திடுவோம்
பொழுத‌டைய‌ க‌ட‌ல்குளிச்சு
வீட்டுமுத்த‌ம் மிதித்திடுவேம.ம‌ர‌ம் இள‌க்கி1 =கட்டுமரத்தை கடலில் இறக்குவது
க‌ட‌ம‌ர‌மும்2 =க‌ட்டும‌ர‌த்தின் பின்புற‌ம்
அணிய‌மும்३ =க‌ட்டும‌ர‌த்தின் முன்புறம்
க‌ம்பாலும4 = கயறு அல்லது வடம்
சேப்பு வைக்க5 = மரத்தை சேர்த்து கட்டுவது
யாத்தின‌மு6 = தொழில் க‌ருவிக‌ள்
ஒம‌லுகூட7 = பொட்டி பொரிய‌ க‌ட‌வ‌ம்
சேக்காளி8 = ந‌ண்ப‌ர்க‌ள்

வெள்ளை கொக்கு


உறுமீன் வ‌ரும‌ள‌வும்
காத்திருக்குமாம் அந்த‌ கால‌ கொக்கு...
திர‌ண்டு வ‌ரும் அலையும் தாண்டி
கொத்தி பிடித்திடுமாம்
இது இந்த‌கால‌ கொக்கு

ம‌னிதா
துணிவேடு நீயும் எதிற்கொள்
அத்த‌னையும் வ‌ச‌மாகும்உன்ப‌க்க‌ம்....

மென‌க்கெடு1


வனம்போயி அறுத்தெடுத்து

ஓடாவி2 செதுக்கி தந்த கடல் தேரு

பெரும‌டியை 3 சும‌ந்த‌ ம‌ர‌மிது

ஓங்கார‌ காற்றையும் உற‌ப்பான 4 க‌டலையும்

கிழித்து பாயும் ம‌ர‌மிதுஇது

ஒடாத‌ க‌ட‌லுமில்லை

பார்க்காத சேலுமில்லை5

மீன்க‌ளையும் மீன‌வ‌னின்வாழ்வு த‌னையும்

சும‌ந்து வ‌ரும்க‌ட்டும‌ர‌ம்
மித‌ந்து மித‌ந்து களைச்சு போச்சு

இன்றுஇத‌ற்கு ஓய்வு நாளாம்மென‌க்கெடு1 = ஓய்வு நாள்

ஓடாவி2 = க‌ட்டு ம‌ர‌ம் செய்ப‌வ‌ர்

பெரும‌டியை३ = பெரிய‌ வ‌லை

உற‌ப்பான4 = வேகம்

சேலுமில்லை5 = நீரோட்ட‌ம், காற்றின் போக்கு

காத்திருப்போம்


நடுக்கடலில் வலை விரித்த‌பிள்ளைகளுக்கு
சுடும் சூரியனும் குளிர்ந்திடும் நிலவும்
வழித்துணைதான்

ஆழிக்கடலில் ஆர்ப்பரிக்கும் அலையும்
சூரைக்காற்றும் நல்ல‌ தோழன் தான்
நயவஞ்சகன் இலங்கை ராணுவம்
கண் படக்கூடாது

விரித்து வைத்த க‌ன்னி வெடியில்
சிக்கி சிதைந்திடவும் கூடாது
சீறிவரும் துப்பாக்கி தோட்டாவும்
பய்ந்திடவும் கூடாது
பதபதைத்த உள்ளத்தோட‌

கடற்கரையில் தினந்தோறும்காத்திருப்போம்
க‌ண்ணிமைப்போல்க‌ட‌ல் அன்னை

எங்களையும் காத்திட‌ம்மா.

Saturday, April 5, 2008

தனிமை - ஏப்ரல் மாத போட்டிக்கு


இந்த தனிமை ..... மிகக் கொடுமையானது ...
சுனாமியின் போது ப‌திவு செய்த‌து.த‌ன் குடும்ப‌த்தையே அலையின் கோரப் பசிக்கு ப‌லி கொடுத்த‌வள் தனிமையாய் .... பின் புல‌த்தில் அழிந்து போன‌ த‌ன் ஓலை வீட்டின் மிச்ச‌ங்க‌ள். அந்த‌ மூதாட்டியின் க‌ண்ணீர் காட்சிக‌ள் இன்றும் என்னோடு த‌ங்கிபோன‌வை. ஜ‌வ‌ஹ‌ர்ஜி...

Tuesday, April 1, 2008

கரை மடி


குமரி மாவட்ட கடற்கரையோரங்களில் நடைபெறும் மீன்பிடித் தொழிலின் ஒரு வகை தொழில்நுட்பமாகும் கரை மடி என்பது.

வெள்ளன விடியல் பொழுதிலேயே கடற்கரையில் மீனவர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கடற் பகுதியை கண்காணிப்பார்கள்। கடலின் நீரோட்டம் மற்றும் காற்றின் போக்கை கணித்து கொண்டிருப்பார்கள். கடலின் மேற்பரப்பில் மீன்களின் நடமாட்டத்தை கடலின் நிறம் மாற்றத்தின் மூலமாக அறிந்து கொள்வார்கள்.மீன்களின் வரத்து அதிகம் வந்தவுடன், படகில் வலையேடு சிலர் ஏறி கொள்வார்கள் வலையின் ஒரு முனையை கரையில் நிற்பவர்களிடம் கொடுத்துக்கொண்டு வலையை கடலில் விரித்தவாரே ஒரு நீள் வட்ட வடிவமாக படகை செலுத்தி வலையின் மறுமுனைகளை கடற்கரையில் நிற்கும் மற்றவர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார்க‌ள். வலையின் இரு முனை ப‌க்க‌ங்க‌ளிலும் நீண்ட‌ க‌யிறுக‌ளால் இணைக்க‌ப‌ட்டிருக்கும் முனைகளின் ப‌க்க‌த்திற்கு சுமார் 25 மீன‌வ‌ர்கள் வீதம் சேர்ந்து நின்று வ‌லையை ஒரே முக‌மாக‌ புஜ‌வ‌லிமையால் ஒருசேர‌ இழுப்பார்க‌ள். க‌ட‌லில் விரிக்க‌ப‌ட்ட‌ வ‌லையான‌து அதில் அகப்பட்ட மீன்களோடு வ‌ளைந்து கரையை நோக்கி வ‌ந்து கொண்டே இருக்கும்.பொதுவாக‌ இந்த‌ கரைம‌டி க‌ட‌ற்க‌ரையில் செய்ய‌ப‌டுகிற‌து.இதில் அதிக‌ப‌டியான‌ மீன்க‌ள் ப‌டுவ‌தில்லை சாளை,ம‌த்தி, வாளை, நெத்த‌லி,விளைமீன்.வேளாமீன் போன்ற மீன்க‌ள் படுகின்ற‌ன‌.

இந்த‌ க‌ரைம‌டியில் விரிக்க‌ப‌டுகின்ற‌ எல்லா வ‌லைக‌ளிலும் மீன்க‌ள் கிடைப்ப‌தில்லை ப‌ல‌ ம‌ணிநேர‌ வேலையும் உட‌ல் உழைப்பும் வெறுதாய் போவ‌தும் உண்டு இவர்களுக்கு.
கிழக்கு கடற்கரையில் ஏப்ர‌ல் 15 ம் தேதியிலிருந்து 45 நாட்களுக்கு ஆழ்க‌ட‌ல் மீன்பிடித்த‌ல் த‌டை செய்ய‌ ப‌ட்டுள்ள‌து. இந்த‌ 45 நாட்க‌ள் மீன்க‌ள் இன‌விருத்தி கால‌மாகும். இந்த படங்கள் ச‌மீப‌த்தில் கொட்டில்பாடு என்ற‌ க‌ட‌ற்க‌ரை கிராம‌த்தில் ப‌திவு செய்த‌தாகும்.