Monday, September 22, 2008

நெஞ்சு பொறுக்குதில்லையே

சின்ன வயசில் நெல்லையிலிருந்து குமரிக்கு பஸ்சில் பயணப்படும்போது ஜன்னல் வழியே சாலையை பார்த்து நான் ரசிப்பது எதிர் திசையில் ஓடிக்கடக்கும் மிகப்பெரிய மரங்களை கண்டு.
வழிநெடுக சாலையின் இரு பக்கங்களிளும் பெரிய‌பெரிய ஆலமரங்களும் அதன் நீண்ட விழுதுகளும்,தூரத்திலிருந்து பார்த்தால் குகையை கடந்து செல்வது போல இருக்கும். மரங்களின் விழுதுகள் மீது பஸ்சின் மேல் பக்கம் உரசி செல்வதால் கத்தரிக்க பட்ட பெண்களின் கூந்தல் போல அழகாக காட்சியளிக்கும்.
பஸ் பயணத்தின் போது வரலாற்று ஆசிரியர் சொல்லி தந்த பாடம் என் மனதில் படமாக காட்சிவிரிக்கும்.அசோகர் சாலையோரங்களில் மர‌ங்களை நட்டார்.மன்னர் தனது குதிரை வண்டியில் புடைசூழ பயணப்படுவது போலவும்,சோலையாக காட்சியளிக்கும் மரநிழ‌லில் மன்னர் ஓய்வெடுப்பது போலவும்,அடர்ந்த மரகிளைகளின்வூடே பொத்தல் பொத்தலாக வழிந்து வீழும் ஒளிகீற்றுகள் மன்னரும் அவரது பரிவாரங்களும் உடுத்தியிருக்கும் பட்டாடைகள் மீது ஒளிக்கதிர்களாக‌ பட்டு ஜொலிர்ப்பதையும் மனக்கண்ணில் பார்த்து லயித்துபோயிருக்கிறேன்.
ச‌மீப‌த்தில் கும‌ரியிலிருந்து வ‌ள்ளியூருக்கு பைக்கில் ப‌ய‌ண‌ப்ப‌ட்டேன்.மிக‌வும் அதிர்ச்சியாக‌ இருந்த‌து சாலை விரிவாக்க‌த்திற்காக‌வும் நால்வ‌ழி சாலைக்காக‌ வ‌ழிநெடுக‌ ஓங்கிவ‌ள‌ர்ந்த‌ அத்த‌னை பெரிய‌ விருச்ச‌ங்க‌ளையும் வெட்டி விழ்த்தியிருந்த‌ன‌ர்.ம‌ர‌த்தின் கொண்டை வெட்ட‌ப‌ட்டு முண்ட‌மாக‌ ப‌ல ‌ம‌ர‌ங்க‌ள்‌ ப‌ரிதாபாமாக‌ நின்ற‌ன‌.வீழ்ந்துகிட‌ந்த‌ ம‌ர‌ங்க‌ளுக்கெல்லாம் நூறு வ‌ய‌துக்கு மேல் இருக்கும் , க‌ரையான் அரித்து திர‌கித்து போய்கிட‌ந்த‌து.ஆத்திர‌ அவ‌ச‌ர‌த்திற்கு ஒதுங்க‌ நிழ‌லும் இல்லை, சாலை முழுக்க‌ பொட்ட‌ல் காடாக‌ கிட‌க்கிற‌து.


வழியில் ஆர‌ல்வாய் மொழி வ‌ன‌ச்ச‌ர‌க‌ செக்போஸ்ட் ஒன்று உள்ள‌து அந்த பகுதியிலும் மரங்கள் வெட்டப்பட்டு வீழ்ந்துகிடக்கிறது. அத‌ன் அருகே ஒரு அறிவிப்பு ப‌ல‌கையும் மாட்டி வைத்துள்ள‌ன‌ர்.அதை ப‌டிக்க அதில் உள்ள வாசகங்கள் என‌க்கு வேடிக்கையாக‌ ப‌ட்ட‌து. "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை எண்ணி" என் விழ்ந்து கிடந்த மரங்களை கடந்து சென்றேன்.
பள்ளிப்பருவத்தில் நெல்லை வண்ணாரப்பேட்டை நெடுஞ்சாலையில் மண்ணை கால்களால் தட்டி புழுதி பறக்க வைத்து ரசித்துக்கொண்டே நடந்ததும், அந்த சாலையோரத்தில் உயர்ந்த நாவல் மரங்களும் அதிலிருந்து வீழ்ந்து கிடக்கும் நாவல் பழங்களும் மண்களை ஊதி துடைத்து தின்ற பின்பு கைகளிளும் வாயிலும் ஊதா நிறமாக மாறியிருக்கும், வாகைமரத்தில் நீண்ட சாட்டை சாட்டையாக தொங்கும் விதையின் மீது தலைகீழாக தொங்கிகொண்டே விதைகளை கொறித்து துப்பும் கிளிகளையும்,ஆலமரவிழுதுகளை க‌ர‌ங்க‌ளால் இருக‌ ப‌ற்றிக்கொண்டு விழுதுக்கு விழுதுக்கு தாவி கொக்கிரகுளம் வரை தாவும் குரங்குகளும். இன்று வரை என் மன‌ நினைவகங்களில் பசுமயையான காட்சிகளாகும்.
பூமி அதிக ‌வெப்ப‌ம‌டைவ‌தால் ம‌ர‌ங்க‌ளை ந‌டுங்க‌ள், வ‌ன‌ங்க‌ளை பாதுகாப்போம் என‌ உல‌க‌ அள‌வில் அறிவுறுத்தப்‌ப‌டுகிற‌து. இங்கே ஒரு ப‌க்க‌ம் ப‌த‌றுக‌ளைப்போல மரங்கள்‌ வெட்டி வீழ்த்தப்‌ப‌டுகிற‌து.
திரும‌ண ‌வீடுக‌ளில் ப‌ண்டைய‌ கால‌ங்களிலிருந்தே திரும‌ண‌த்தின் இர‌ண்டொரு நாள்களுக்கு முன்பாக‌ சொந்த‌ ப‌ந்த‌ங்க‌ளையெல்லாம் அழைத்து "ஆல‌ங்கால்" ந‌டுத‌ல் என‌ ஒரு வைப‌வ‌த்தை ந‌ட‌த்தி விருந்துண்டு அத‌ன் பின் திரும‌ண‌த்திற்கு பின்பாக‌ அந்த‌ ம‌ண‌ம‌க்க‌ள் நினைவாக‌ஊரின் ஒரு ப‌குதியில் அந்த‌ ஆல‌ங்காலை ந‌ட்டு வைத்து ம‌ர‌ம் வ‌ள‌ர்க்க‌ ந‌ம்மை‌ ப‌ழக்கினார்கள் ந‌ம் முன்னேர்க‌ள்.அறிவார்ந்த‌ அந்த‌ ப‌ழ‌க்க‌மும் தேய்ந்து இன்று ஒரு ஆல‌ம‌ர‌ கிளையை ஒடித்து கொண்டுவ‌ந்து பெய‌ருக்கும் ந‌ட்டு வைத்து தூர‌தூக்கி எரிந்துவிடுகின்ற‌ன‌ர்.மண‌மேடைக‌ளில் ம‌ண‌ம‌க்க‌ள் கைக‌ளால் முளைப்பாரியிடு‌வ‌தையும் ந‌ம‌க்கு ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்தி த‌ந்த‌ன‌ர் ந‌ம் முன்னோர்க‌ள்.அத்த‌னையும் தூக்கி க‌டாசிவிட்டு எந்திர‌ ம‌ர‌ங்க‌ளை வ‌ள‌ர்க்க‌ நாம் சிந்திக்க‌ தொட‌ங்கியுள்ளேம்.
"அருள‌க‌ம்" என்ற இய‌ற்கை பாதுகாப்ப‌க‌ அமைப்பை சேர்ந்த‌ சு.பாரதி தாச‌ன் என்ப‌வ‌ர் இடிந்த‌க‌ரையிலிருந்து தோமையார் புர‌ம் வ‌ரை சுமார் 6 கிமீ சாலையோர‌த்தில் ம‌ர‌ங்க‌ளை ந‌ட்டு வ‌ள‌ர்த்து வ‌ருகிறாம். இவ‌ருடைய‌ இந்த‌ செய‌லும் பாரா‌ட்டுத‌லுக்குரிய‌தாகும்.