Friday, November 13, 2009

நிலை குலைந்த மலைகளின் ராணிஊட்டி அண்ணனுக்கு போண் செய்தேன் எப்படியுள்ளீர்கள் என்று?
அதை ஏன் கேக்கிற தம்பி....ன்னு இழுத்தார், இன்று விடியல் காலை 4மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்து 9மணிக்கு தான் விட்டது ஏதே உள்ளுனர்வு என்னை தூக்கவிடவில்லை.காரணம் பயம் எந்த நேரம் நிலச்சரிவு ஏற்படுமோ என்று. நீங்களெல்லாம் கொஞ்சநாட்களுக்கு முன்பு கடற்கரையில் சுனாமி எந்தநேரம் ஏற்படுமோ என்று அச்சத்தோடு வாழ்ந்தீர்கள் அப்போது நான் நினைத்துகொள்வதுண்டு அப்பாடா நாம மலை உச்சியிலேதானே வாழ்கிறோம் நமக்கு ஆபத்து ஏதுமில்லை என்று. ஆனால் இப்போது புரிகிறது இயற்கையின் சீற்றம் எங்கு வழ்ந்தாலும் மனிதனை விடாது என. மனிதன் இயற்கையை நேசிக்க மறந்துவிட்டான்,இயற்கையை அதன் போக்கை இவன் மாற்ற நினைக்கிறான்.அதை துண்புறுத்துகிறான். அது பொருக்கும் மட்டும் பொருத்து பின்பு அதன் சீற்றத்தையும் ஆக்ரோசத்தையும் காட்டுகிறது.
அன்றாடம் பயன்படுத்த காய் கறிகள் இல்லை வீட்டில், நகர்முழுவதும் சாலைகள் துண்டிக்கப்பட்டு அல்லோல படுகிறது

வாகனங்களுக்கு பெட்ரோல் வினியோகம்மில்லை,குடிநீர் சப்ளையும் துண்டிக்கபட்டுள்ளது. எத்தனை நாட்களுக்கு இருப்பதை வைத்து சமாளிப்பது என மக்கள் தின்டாடி வருகிறார்கள்.
மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தால் மீட்பு பணியும் தொய்வு ஏற்படும்,மீண்டும் இதைவிட மிகமோசமான நிலை ஏற்படும்.


நீலகிரியில் ஏன் நிலம் சரிகிறது?


உதகமண்டலம்: நாடெங்கும் இருந்து மக்கள் கோடையில் சென்று பார்த்து ரசித்து நேசிக்கும் பூமி நீலகிரி. மலைகளின் அரசி என்ற செல்லப் பெயர் காரண பெயரும்கூட. அங்கு 150க்கு மேலான இடங்களில் மண் பெயர்ந்து சரிந்து 40க்கு மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. 3 நாள் மழையில் இத் தனை இடங்களில் சீட்டுக் கட்டு போல வீடுகள் சரிந்து விழுந்து மண் மூடிய சோகம் இதற்குமுன் நடந்ததி ல்லை. மலையில் ஏன் மண் சரிகிறது? உயரமான இடத்தில் பாரம் வைக்கக் கூடாது என்பது கடற்கரை மணலில் கோபுரம் கட்டி விளையாடும் குழந்தைகளுக்குக்கூட தெரியும். சுகவாச ஸ்தலத்தில் இடத்தை வளைத்து கட் டிடங்கள் எழுப்பும் கோடீஸ்வரர்களுக்கும் துணைபோகும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் போனதுதான் சோக நிகழ்வுக்கு காரணம். மலையில் 30 டிகிரி சாய்வான இடத்தில் கட்டிடம் கட்டக்கூடாது என்று கோர்ட் தடை இருக்கிறது. ஆனால் ஊட்டியில் 70, 80 டிகிரி சாய்ந்த இடங்களைக்கூட விட்டுவைக்கவில்லை. கட்டிடங்களை அடுக்கியிருக்கின் றனர். கட்டிடத்தின் உயரம் 7 மீட்டரை தாண்டக்கூடாது என்பது விதி. இதுவும் மதிக்கப்படாத விதியாக உள்ளது. 87 வணிக கட்டிடங்கள், 15 மத வளாகங்கள், 20 பள்ளிக்கூடங்கள் உட்பட 1,337 கட்டிடங்கள் விதிகளை அப்பட்டமாக மீறி கட்டப் பட்டிருக்கின்றன சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் அங்கு இனி கட்டிடங்கள் கட்டக்கூடாது என கடந்த ஆண்டு உயர்நீதி மன்றம் தடை விதித்த பிறகும் அங்கு புதிய கட்டிடங்கள் முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்கின் றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். சட்டத்தை துச்சமாக மதிக்கும் மிகப் பெரிய செல்வந்தர்கள், நிறுவனங்கள் இதன் பின்னணியில் இருப்பதை சுலபமாக புரிந்து கொள்ளலாம் என்கின்றனர். பிரிட்டிஷ் ஆட்சியில் அங்கும் இங்குமாக சில பங்களாக்கள் கட்டப்பட்டன. 150 ஆண்டு தாண்டி இன்றவும் அவை மழையால் பாதிக்கப்பட்டதில்லை. தோடர், கோத்தர், குறுப்பர், பனியர் போன்ற பழங்குடியினர் வனங்களை ஒட்டி சிறுவீடுகள் கட்டி வாழ்கின்றனர். அங்கெல்லாம் நிலச்சரிவு ஏற்பட்டதில்லை. படுகர் வசிக்கும் ஹட்டி கிராமங்களும் பாதுகாப்பாக உள்ளன.

சரிவான புறம்போக்கு நிலத்திலும், தாழ்வான பகுதிகளிலும் கிடைக்கிற நிலத்தை பிடித்து வீடு கட்டி வசிக்கும் சாதாரண மக்களும் இருக்கின்றனர். மழை வலுக்கும்போது தாக்குப் பிடிக்காத இந்த வீடுகள் சரிந்து விழுந்து அதில் வசிப்பவர்களுடன் மண்ணில் புதைகின்றன. அடுத்த காரணம் குவாரிகள். பாறைகள் சரிவில் உருண்டு விழும் அபாயம் உள்ளதால் குவாரி நடத்த அரசு தடை விதித்துள்ளது. ஆனால் 120க்கு மேற்பட்ட குவாரிகள் இயங்குகின்றன. பிரமாண்டமான பாறைகளை தகர்க்க வைக்கும் வெடி, சுற்றிலும் கடுமையான அதிர்வை ஏற்படுத்துகிறது. பெரிய இயந்திரங்கள் மூலம் தொடர்ந்து பாறைகள் உடைக்கப்படுவதால் மண்ணுக்கும் பாறைகளுக்கும் உறவு முறிந்து இடைவெளி ஏற்படுகிறது. மழை காலத்தில் அந்த இடைவெளியை நிரப்பும் தண்ணீர் வேறொரு முனையில் துளைத்துக் கொண்டு வெளியேற பார்க்கிறது. பாறையை விட்டு பிரிந்ததால் பலவீனப்பட்ட மண் இந்த போராட்டத்தில் தோற்று தண்ணீர் முன் சரண் அடைகிறது. அதன் விளைவு: மொத்தமாக நிலம் சரிகிறது. மலை என்றால் அதில் காடுகள் நிறைந்திருக்கும். நீலகிரியிலும் அப்படி இருந்தது. காட்டு மரங்களின் வேர்கள் பல அடி ஆழம் எல்லா திசையிலும் ஊடுருவி பரவியிருக்கும்.மரம் + மண் + பாறை கூட்டணி பலம் மிகுந்தது. எத்தனை நாள் மழை கொட்டினாலும், தண்ணீரால் இந்த கூட்டணியை தோற்கடிக்க முடியாமல் இருந்தது. மாறாக அந்த தண்ணீரால் மண்ணும் மரமும் தங்களை பலப்படுத்திக் கொள்ளும். நாளாவட்டத்தில், பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டு நிலம் வாங்கி தேயிலை, காய்கறி, பழ தோட்டங்களக மாற்றின. இந்த பயிர்களின் வேர்களால் பூமிக்கு பயன் கிடையாது. மண் பிடிமானம் இழந்து, சின்ன மழைக்கே நிலம் பாளம் பாளமாக பெய ர்ந்து விழுகிறது. நிறுவனங்கள் இன்சூரன்ஸ் கணக்கை பார்க்கும்போது, பாதிக்கப்பட்ட அப்பாவி குடும்பங்கள் நிவாரணத் தை எதிர்பார்த்து நிற்கும்.

இன்னொரு காரணம் சுற்றுலா. எத்தனை வாகனங்கள் மலையேறி வந்தாலும் 'ஜர்கண்டி, ஜர்கண்டி' என்று ஊருக்குள் அனுமதிக்கிறார்கள். அவர்கள் வசதியாக தங்கி அனுபவிக்க விடுதிகள், குடில்கள், ஓட்டல்கள் கட்டு வது அதிகரிக்கிறது. தேவை அதிகமாகிறது, சூழல் கெடுகிறது. சோகத்தை சுமந்து நிற்கும் நீலகிரி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு எந்திரம் சுறுசுறுப்பாக இயங்குகிறது. நிரந்தர தீர்வு ஏற்படாதா என்ற ஏக்கமும் மலையெங்கும் எதிரொலிக்கிறது்.

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகளின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. அமைச்சர்கள் மேற்பார்வையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்தாலும், 40-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கு என்ன ஆறுதல் கூறிவிட முடியும்!

அதிக அளவு மழை பெய்திருப்பதை நிலச்சரிவுக்கு ஒரு காரணமாகக் கூறினாலும், இதை இயற்கையின் பேரிடர் என்பதைக் காட்டிலும், மானுடத்தின் பிழை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

1994-ல் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில், மரப்பாலம் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவின் போதே, இதற்கான காரணங்களையும், இனிவரும் காலங்களில் எத்தகைய அணுகுமுறை மூலம் இதைத் தவிர்க்க முடியும் என்பது குறித்தும், பல்வேறு அமைப்புகள் கருத்துத் தெரிவித்த பிறகும், அது குறித்து எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றால் வேறு என்னதான் சொல்ல முடியும்?

நீலகிரியில் நிலச்சரிவு என்பதே 1970-க்குப் பிறகுதான் சிறிய அளவில் ஏற்படத் தொடங்கியது.

நீலகிரியில் உள்ள குன்றுகள் அனைத்துமே முழுக்கமுழுக்கப் பாறைகளால் அமைந்தவை அல்ல. பெரும்பாலான குன்றுகள் கால்பங்கு பாறை, முக்கால் பங்கு மண்ணாக இருப்பவை. சில இடங்களில் பாறைகள் பாதி, மண் பாதி கலந்து நிற்கிறது. அந்தந்தக் குன்றுகளில் உள்ள பாறை, மண் விகிதம் மற்றும் கடல்மட்டத்தின் உயரத்துக்கு ஏற்ப தனக்கான தாவரங்களையும் மரங்களையும் நீலகிரி மலை தனக்குத்தானே வளர்த்து செழித்திருந்தது - திப்பு சுல்தானிடமிருந்து பிரிட்டிஷ் அரசின் கைக்கு மாறும்வரை.

பிரிட்டிஷ் அரசின் அன்றைய கோயமுத்தூர் கவர்னர் ஜான் சலைவன் இந்த மலைக்கு முதலில் சென்ற பிரிட்டிஷ் அதிகாரி. மலையின் அழகும், அதன் குளுமையும் பிடித்துப்போனதால், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கான கோடை வாசஸ்தலமாக மாற்றினார். சென்னை ராஜதானியின் பிரிட்டிஷ் அதிகாரிகள் வருவதற்காகவே மலை ரயில் பாதை (இரு தண்டவாளங்களுக்கு இடையே பல்சக்கரங்களுடன் ஒரு தண்டவாளம் இருக்கும் வகையில்) அமைக்கப்பட்டது. கவர்னர் சலைவனின் இந்த ஊடுருவலை மலைவாழ் மக்களான படுகர், தோடா இனத்தவர் எதிர்த்தனர். அந்தப் பழங்குடி மக்களை நூற்றுக்கணக்கில் கொன்றுதான் தனது விருப்பத்தை அவரால் நிறைவேற்ற முடிந்தது.

கோடை வாசஸ்தலம் என்பதோடு, இங்கே தேயிலை பயிரிட முடியும் என்பதையும் கண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக காடுகளை அழித்தனர். இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த மலையின் பாறை - மண் கலப்புத் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் கிடைத்த இடங்களையெல்லாம் தேயிலைத் தோட்டம் அமைப்பதற்காகக் காட்டை அழித்தனர்.

1970-களில் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்ததால் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டம் அமைக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது. எத்தகைய மழையிலும் வேர்களால் மண்ணைப் பிடித்துக் காத்துநின்ற மரங்களும் புல்வெளிகளும் அழிக்கப்பட்டபிறகு, மழையில் வெறும் மண் கரைந்தது. நீர் ஊறி, ஓதம் தாளாமல் மண்முகடுகள் சரிந்து, மனிதர்கள் இறப்பது வாடிக்கையானது. நீலகிரியின் பல்லுயிர்ப்பெருக்கம் (பயோ டைவர்சிட்டி) முற்றிலும் பாதிப்புக்குள்ளானது.

தேயிலைத் தோட்டங்களுக்காக மலை அழிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, சுற்றுலாத் தலமாக மாறியதால் பயணிகள் எண்ணிக்கை பலநூறு மடங்கு அதிகரித்தது. இவர்களுக்காக காடுகள் மறைந்து, கட்டடங்கள் முளைத்தன. உதகை, குன்னூர் இரண்டு இடங்களில் மட்டும் சுமார் 500 விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் உள்ளன. சரியான கழிவுநீர் வாய்க்கால்கூட உதகை, குன்னூரில் இல்லை என்பது சிக்கலை மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது.

1994 மரப்பாலம் நிலச்சரிவின் போதே, தொலையுணர் தொழில்நுட்பத்தின் மூலம் மலையின் தன்மையையும், காட்டின் அளவையும் கண்காணித்து, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது தொலையுணர் தொழில்நுட்பத்தில் பலபடிகள் முன்னேறியுள்ள நமக்கு, நீலகிரி மலைகளின் வகைகளையும், எத்தகைய காடுகள் அங்கே இருந்தால் நிலச்சரிவு ஏற்படாது என்பதையும் மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும்.

ஆக்கிரமிப்பாலும், காடு அழிப்பாலும் முற்றிலும் மாறிக்கிடக்கும் "ஒத்தக் கல் மண்டூ' என்கிற உதகமண்டலம், குன்னூர் மற்றும் கோத்தகிரி மலைகளில் மழை பெய்தால், எந்தெந்தப் பகுதிகள் வழியாக மழை நீர் கீழே இறங்குகிறது என்பதைக் கண்டறிந்து, தேவையான இடங்களில் நீர் வெளியேற வாய்க்காலும், மண்கரையாமல் இருக்கக் காடுகளும் வளர்க்க முயல வேண்டும்.

பாறையின்றி மண்மேடுகள் மட்டும் இருக்கும் பகுதிகளில் வீடுகள் கட்டத் தடை விதிப்பதும், போக்குவரத்து வசதி என்ற பெயரில் நீலகிரியில் புதிய சாலைகள் அமைப்பதைக் கைவிடுவதும்கூடப் பயன்தரும்.

நீலகிரி மலையில் சமவெளியாகப் பரந்து கிடக்கும் புல்வெளிகூட, தன் வேர்களால் அந்த மண்மலையைத் பிடித்துக் காத்து நிற்கிறது என்பதைப் புரிந்து கொண்டால்தான், மலையரசி "கரையாமல்' நிற்பாள்; மனிதரையும் அழ வைக்க மாட்டாள்.

Friday, November 6, 2009

புகைப்பட போட்டி- பரிசு


தமிழக வனத்துறை கழிந்த அக்டோபர் 12ம் தேதி வன உயிரின வார விழா 2009 வாக கொண்டாடினர்.ஸ்காட் கிருஸ்தவக் கல்லூரியில் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர்.அதில் புகைப்பட போட்டியும் நடந்தது.சுமார் 12 புகைப்படகலைஞர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.அதில் எனது இந்த புகைப்பட‌த்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.நான் பரிசு கிடைக்கும் என எதிற்பார்த்த படம் இவைகள்.