முண்டந்துறை புலிகள் காப்பகம் பயணம்
பல வருடங்களுக்கு முன் எடுத்த படங்கள் இது.
அன்று என்னுடைய பயணத்தில் தம்பி பிராங்கிளின் உடன் வந்திருந்தான். அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் நாங்கள் நாகர்கோவிலிருந்து பைக்கில் கிளம்பினோம். காலை உணவு வழியில் களக்காட்டில் ஒரு சின்ன ஹோட்டலில் சாப்பிட்டோம்.ஹோட்டல் சின்னதாக இருந்தாலும் சுவையாக இருந்தது. வயதான அம்மா ஒருவர் கல்லில் தோசை வார்த்து தந்தார்கள். மதியத்திற்கு தேவையான சாப்பாடு புளியோதரையும் மசியலாக அரைத்த தேங்காய் சம்மந்தியும் அவித்த முட்டை என பொதியாக கட்டி கையில் எடுத்துச் சென்றோம். குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில்களில் இருந்தது. என்னை பொறுத்தவரை பயணம் ஏன்றால் இரண்டு பேர்கள் மட்டுமே பயணிப்பது சால சிறந்தது. நிறைய பேர்கள் வந்து சேர்ந்தால் ஆளுக்கொரு திசையில் அல்லோலப்படும். அது பின்னர் இன்ப சுற்றுலாவாக மாறிவிடும். என்னை போன்ற காட்சிகளின் மீது எளிதில் வசப்படுகிறவர்களுக்கு பயணம் பல அற்புதமான காட்சிகளை தரிசிக்க தந்து கொண்டே இருக்கும். வழிநெடுக நின்று நின்று படம் பிடித்தபடியே எனது பயணம் தொடரும்.
முன்டந்துறை அடர்வன வனத்தினை பார்ப்பதற்கு அப்போது அனுமதித்தார்கள். பெரிய கெடுபிடிகள் இல்லாமலிருந்த காலம் . காட்டு வழியில் மிளாக்கள் திடுப்பென எங்கள் பைக்கிற்கு முன் எதிர்ப்பட்டு, திகில் ஏற்படுத்தியது. கேமிராவோடு பயணிப்பதும் படங்களெடுப்பதும் ரிலாக்ஸாக உணர வைக்கும். எனக்கொல்லாம் படமெடுத்தல் என்பது ஸ்டெரஸ்பஸ்ட்டராகவே உணர்வேன். நம் தொழிலே நம்மை ஆற்றுப்படுத்துகிறதென்பதும் அதுவே நம்மை உற்சாகம் கொள்ள வைக்கிறதென்பதும் வரமே. எத்தனை பேருக்கு இப்படியான தொழில் வாய்க்கும் என தெரியவில்லை.
அந்தப் பயணத்தில் ஆர்பரிக்கும் அகஸ்த்தியர் மலை எங்களை வரவேற்றது. தூரத்தில் நின்று பார்த்தோம். சஹானாவின் கவிதையில் வரி மாதிரியாக மாதிரியாக, 'எங்களது சின்ன கண்களால்' அவ்ளோ பெரிய மலையினையும் ஹோவென கொட்டுகிற அருவியனையும் பார்த்தோம்.பிரமித்து திகைத்து போய் நின்றோம். நீர்த்திவலைகள் காற்றில் பறந்து வந்து எங்களை நனைத்து பரவசப்படுத்தியது. அந்த காட்சி இன்னும் அப்படியே மனதில் சட்டகம் இட்ட ஒளிப்படமாதிரியாக பதிந்திருக்கிறது. இப்போது அந்த வெள்ள சாட்டத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். காலத்தை உறைய வைத்து தந்திருக்கிறேன்.
முகம் முழுக்க கருப்பு நிற நீண்ட வால்கள் உடைய சிங்க வால் குரங்குகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்தும் தாவியபடியும் இருந்தன. உயரமான மருத மரங்களில் புஸுபுஸு வென துடைப்பங்களை போல வால்களை கொண்ட மலபார் அணில்கள் தாவி ஓடின. தூரத்தில் புள்ளி மான்கள் கூட்டமாகவும் சர்வ சுதந்திரமாகவும் பச்சை புல்வெளியில் மேய்கிறதை காண்பதற்கு வாய்ப்பு கிட்டியது அன்று எங்களுக்கு. காட்சிகளை பார்ப்பதற்காகவா போனோம்! அவற்றை ஒளிப்படங்களாக பதிந்துக் கொண்டோம்.அடர் வனம் சோலையாக இருந்ததால் பயணம் களைப்பை ஏற்படுத்தவில்லை. வழிநெடுக நிழல் வெயில் புள்ளிகளாக தரையில் கோலம் போட்டபடி இருந்தது.
மதியம் காரையார் டேம் அருகில் மீன் வறுவல் வியாபாரம் நடந்தது. ஆளுக்கொரு வறுத்த கட்லா மீன் துண்டங்களை வாங்கிக் கொண்டோம். நாங்கள் கொண்டு சென்ற புளியோதரைக்கு மீன் வறுவல் மிக சேர்த்தியாக இருந்தது.
காரையாறு டேம்மில் படகுப் பயணம் மறக்க இயலாத திரில் அனுபவத்தை தந்தது. மோட்டார் வைத்து படகை இயக்கினார்கள். நாங்கள் பத்து பதினைந்து பேர்கள் படகில் பயணித்தோம்.நடு வழியில் வைத்து படகின் மோட்டார் பழுதாகிப் போனது. நீண்ட நேரம் படகு ஓட்டுநர் பழுதினை சரி செய்ய முயன்றார். சரி செய்ய முடியவில்லை. படகில் இருந்த அனைவருடைய முகமும் கலகலத்தது. நேரம் செல்லசெல்ல படகு அதன் போக்கில் டேமின் ஷட்டர் இருக்கிற பகுதியினை நோக்கி வழிந்து போனது.
தொலைபேசி இல்லாத காலம். ஓட்டுநர் ஓங்கி குரல் எழுப்பி கரையை நோக்கி உதவிக்கு ஆட்களை அழைத்தார். படகிலிருந்த பெண்களும் குழந்தைகளும் அழ ஆரம்பித்து விட்டனர்.
எப்படியோ! நாற்பது நிமிடத்திற்கு பிறகு தூரத்தில் ஒரு படகு எங்களை காப்பாற்றுவதற்கு புள்ளியினைப் போல வந்து கொண்டிருந்தது. படகோட்டி அத்தனை களேபரத்திற்கிடையே யாரும் தண்ணீரில் கை வைக்க வேண்டாமென கேட்டுக் கொண்டார். பெரிய முதலைகள் இருக்கின்றன என்றார். முகம் வெலவெலத்து போனது.
டேமின் கரையில் கால் வைத்த பிறகே உயிர் வந்தது.மனம் வாழ்வதற்காக பிழைத்துவிட்டோம் என்றது.வாழ்வதும் சாவதை நோக்கி தானே! சரி எப்படியும் போகட்டும்.
அப்படியான திகில் பயணமாக
'பயணம் ஒருவரை பணிவானவராக மாற்றுகிறது.பயணம் உலகை தரிசிக்க வைக்கிறது". நாங்கள் மிக அபூர்வமான காட்சிகளை சிறைபிடித்து வந்திருந்தோம்.
#Jawaharclicks #traval #travelphotography #mundanthuraiforest #trunelveli
Comments