மீண்டும் கண்ணீருடன் 2004 சுனாமி
2004 டிசம்பர் 26 காலை 9।30 மணி.....
எனது புகைப்படப் பதிவுகளை பணி முடித்து திரும்புகிறேன்...
ஏய் ஓடுங்க... ஓடுங்க... கடலு உறப்பாகிடக்கு, எங்கும் ஒரே கூக்குரல், புழுதிபறக்க மக்கள் ஓடுகிறார்கள்...
நானும் பறக்கிறேன் எனது பைக்கில், கடியப்பட்டிணம் என்கிற குமரி மாவட்ட கடற்கரை ஊர் சாலையில்... இரத்தம் சூடாகி இதயம் படபடப்பாகி,கண்களில் மிரட்சியொடு பைக்கில் பறக்கிறேன்...மேட்டு பகுதியை நெருங்கும் வேளையில் அசுரத்தனமாக வேகத்தோடு சுழன்று வந்த கடல் நீர் என்னை பைக்கோடு சூழ்ந்து கொண்டது, அடித்து ஒதுக்கியதில் ஒரு தொலைபேசி கம்பத்தை இறுக்கமாக சுற்றிபிடித்து கொண்டேன்.இறைவன் அருளால் உயிர் பிழைத்து இன்று உங்களேடு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்...ஐந்தே நிமிடங்களில் அந்த கடற்கரை ஜனங்களின் வாழ்வே தொலைந்து அடியோடு உருக்குலைந்து போய்விட்டது,ஐந்து நிமிடங்களில் அந்த ஊரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 44 பேர்கள்,என்னுள் உருவான ஒரு அசூரத்தனமான மனத்தைரியத்தோடு கண்களில் கண்ட காட்சிகளையெல்லாம் பதிவு செய்கிறேன்,அத்தனையும் கோரக்காட்சிகள்,ஒரு புகைப்பட கலைஞனுக்கு இந்த சமுகத்தின் மேல் உள்ள பொறுப்புகளை உணர்ந்தவனாக சுனாமி என்கின்ற இயற்கை பேரழிவை, அதன் தாக்கத்தை, உடுக்க துணியின்றி உண்ண உணவின்றி, கணப்பொழுதில் வீடுகளை இழந்து அகதிகளாகிப்போனவர்களை, உறவுகளை தொலைத்து தவிப்பவர்களை, மருத்துவமனை வளாகங்களில் வந்து குவியும் சடலங்களை, என பதிவுகளை செய்தேன்.
காலையில் 5 மணிக்கு நான் வீட்டிலிருந்து கிளம்பிய நான் அன்று வீடு திரும்பும்போது இரவு 12 மணி ஆகியிருந்தது।அன்று முழுவதும் எதுவும் சாப்பிடவில்லை நான்.
விட்டில் என்னை சுற்றி பெரும்கூட்டம் எல்லாம் விசாரிப்புகள்.காரணம் அன்றைய மாலைமலர் பத்திரிகையில் கடல் அலையில் உயிர்பிழைத்த போட்டோகிராபர் என எனது பேட்டி வெளியாகியிருந்தது.
இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை,கடல் அலையின் இறைச்சலும்,இடுப்புவரை சுழன்று வளைத்து அடித்த கடலின் வேகமும்,கண்களில் கண்ட கோரக்காட்சிகளும்,மனதில் ஓட தூக்கம்மின்றி புரண்டு புரண்டு படுத்துகிடந்தேன்।
தனியொரு ஆளாக 112 இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ததை அடுத்த இடுகையில்...
Comments