கண்ணீருடன் - என் இதய அஞ்சலி...
2004 டிசம்பர் 27 காலை....
மாவட்ட ஒட்டு மொத்த நிர்வாகமே குளச்சலில் இறந்து போன 540 பேர்களை அடக்கம் செய்வதற்காக குழுமியிருந்தனர்...
அன்றைய பத்திரிகை செய்திகளைப் படிக்கும் போது மிக பயங்கரமாக இருந்தது. தெற்காசியா முழுவதுமாக சுனாமி துவம்சம் செய்து அழித்து போட்டிருந்தது என,நாகர்கோவிலிருந்து 14கிமி தொலைவில் உள்ள மணக்குடி என்ற கடற்கரை கிராமத்தில் சுனாமி தன் முழு தாக்குதலையும் அரங்கேற்றியிருந்தது.
அந்த அழிவுகளை பதிவு செய்ய அங்கே சென்றேன் கிராமத்துக்குள்ளே நுழையவே முடியவில்லை நுழைவுப் பகுதியில் சமீபத்தில் புதியதாக கட்டியிருந்த [மணக்குடியையும் கீழமணக்குடியையும் இணைக்கும் ] பாலத்தையே காணவில்லை,நான்கு கான்கிரிட் துண்டுகளை இணைத்து அந்த பாலம் கட்டியிருந்தனர்.அதில் இரண்டு துண்டுகளை இன்று வரை காணவில்லை, சுனாமி அலைகளின் வேகத்தை அந்த பாலத்தின் அழிவில் உணரமுடிந்தது.
அடுக்கு மாடி வீடுகளை தரைமட்டமாக ஆக்கி போட்டிருந்தது சுனாமி,ஒரு கட்டுமரத்தை தூக்கி உயரமான இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் வைத்திருந்தது அலைகள். சுனாமி அலைகள் சுமார் மூன்று முறை ஊரை நோக்கி சீறிவந்துள்ளது,குமரி மாவட்டத்திலேயே சுனாமியின் அதிகபடியான தாக்குதலுக்கு உள்ளான இடம் மணக்குடி, கீழ்மணக்குடி கிராமங்கள் தான்.அங்கிருந்த காவல் துறையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர் காரணம் ஊர் முழுவதும் இறந்தவர்களின் சடலங்களாக சிதறிகிடந்தது,அந்த உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் ஆனால் அவர்களை அடையாளம் செல்ல யாரும்மில்லை.சுனாமியின் சீற்றத்தினால் இறந்தவர்க்ளின் உடல்களையும்,உடமைகளையும் அப்படியே அங்கேயே விட்டுவிட்டு உயிர் தப்பி சென்றிருந்தனர் ஜனங்கள்.அங்கு சென்ற நான் இறந்தவர்களை ஒவொருவரையும் நான் கேமிராவில் பதிவு செய்து கொள்கிறேன் பின்பு அடையாளம் காண அவை பயன்படும் என்றேன்.இரண்டு காவலர்கள். நான் மற்றும் இரண்டு நபர்கள்.அந்த ஊரின் பாதிரியார் ஆகியோர் தயாராகி கிளம்பி சென்றோம்.
உள்ளே செல்ல பாதைகள் சீரழிந்து கிடந்ததால் முள்காடுகளின் வழியே நுழைந்து சென்றோம்.உடைந்த வீடுகளின் கதவுகளில் வைத்து உடல்களை தூக்கி வந்தனர் அந்த இருவரும்,ஊரின் மையாவெளியில் உடல்களை சேகரித்து வைத்தோம், நான் ஒவ்வொரு உடல்களையும் முழுவதுமாகவும்,முகத்தை மட்டும் க்ளோசப்பாகவும் இரு படங்கள் என பதிவுகள் செய்துகொண்டேன். அருகில் நின்ற காவலர்கள் இறந்துபோனவர்கள் அணிந்திருந்த உடைகளின் நிறம்,அங்க அடையாளங்கள் போன்றவற்றை குறிப்பெடுத்துகொண்டனர்.முகங்களை திருப்பி வைத்து படம் பதிவு செய்யும் போது வாய்களிலிருந்து நுரை தள்ளியது. கடல் நீர் குடித்தே இறந்து போயிருந்தனர்,சிலரது முகங்கள் அடிபட்டு சிதைந்திருந்தது இரத்தம் வடிந்தது.இறந்து போய் ஒரு நாள் ஆனதால் லேசாக வாடை வீச தொடங்கியிருந்தது.அதிலும் என் மனதை மிகவும் ரணமாக்கிய விசயம் எந்த பாவமும் அறியாத பிஞ்சு குழந்தைகளின் முகங்களை படப்பதிவு செய்யும் போது ஏற்பட்டது என் விழிகளின் நீர் வடிந்தோடியது,உள்ளம் நொறுங்கிபோனது.ஊரே அழிந்து கிடந்ததால் குடிப்பதற்கு கூட தண்ணிர் கிட்டவில்லை எமக்கு,கையுரையும்,முகத்தில் கட்ட மாஸ்க்கும் இல்லாமலே எங்களது பணி தொடர்ந்தோம்.பொக்கலைனர் வரவழைக்கபட்டிருந்தது. அதன் மூலம் ஒரு பெரிய குழி தோண்டி அன்று முழுவதும் நாங்கள் சேகரித்த உடல்களை ஒட்டு மொத்தமாக குழிக்குள் இழுத்து போட்டு அடக்கம் செய்தோம்.கண்களை முடி பிராத்தித்தேன். இறைவா இவர்களின் ஆன்மாவிற்கு இளைப்பாருதலை கொடும் என்று,பொக்கலைனர் ஓட்டி வந்தவரை பார்த்தேன் சபரிமலைக்கு மாலையணிந்திருந்தார் அவரும் இருக்கையில் அமர்ந்தவாரே கைகளை குவித்து வேண்டிக்கொண்டிருந்தார். சுனாமி மதம்,சாதி அத்தனையும் கடந்து மனித மனங்களை இணைத்து போட்டது.உதவும் கரங்களை கொண்டு சேர்த்திருந்தது.
என்னுள்ளே...ஒரு வித ஆத்ம திருப்தி. நான் செய்கின்ற தொழில் மூலமாக கருவி முலமாக இந்த சமுதாயத்திற்ககு பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின்பும் மூன்று நாடகள் தொடர்ந்து உடல்களை அடையாளம் காணும் பணிக்காக என்னை ஈடு படுத்திக்கொண்டேன்....
தொடர்ந்து 28 நாட்கள் சுனாமி தாக்குதலுக்கு உள்ளான கடற்கரை கிராமங்களிலேயே சுற்றி வந்து எனது படப்பதிவுகளை செய்தேன்,
எனது பதிவுகளையெல்லாம் கண்காட்சியாக கண்ணீருடன் என்ற தலைப்பில் புகைப்படகண்காட்சிவைத்து அதில் கிடைத்த ரூபாய் 20000 ஆயிரங்களை முதலமைச்சரின் சுனாமி நிதிக்கு அளித்து மனநிறைவு பெற்றுக்கொண்டேன். வருகின்ற டிசம்பர் 26 2007 மூன்றாவது நினைவு நாளில் சுனாமியில் இறந்துபோன அத்தனை உள்ளங்களுக்கும் என் இதய அஞ்சலி...
Comments