அஞ்சலி

காலை வேளையில் 'ஜே'யிடமிருந்து இந்த 'ஜே'க்கு தொலைபேசி, நீங்கள் என்னை எடுத்துதந்த படங்களை மாத்ருபூமி இதழுக்கு கொடுத்திருக்கிறேன். அப்புறம் மிக முக்கியமான  தகவல், இன்று மதியத்திற்கு மேல் எழுத்தாளர் பூமணியின் இறுதிசடங்கிற்கு போகிறேன் என்னோடு வாருகிறீர்களா ? நிச்சயமாக வருகிறேன் என்றேன். மாபெரும் கரிசல் இலக்கிய படைப்பாளிக்கு அஞ்சலி செலுத்த கிளம்பி இருந்தேன். 

 ஸ்டுடியோ வாசலில் கார் வந்து நின்றது. அவர் காரிலிலே அமர்ந்திருந்திருக்கலாம். ஆனால் அவர் இறங்கி வந்து, வாங்க போகலாமென வெளியில் நின்றார். உள்ளே வாங்க என்று  ஜே யை ஸ்டுடியோவினுள்ளே அழைத்தேன். உள்ளே வந்தவர் என் பெயரிலா நீங்கள் ஸ்டுடியோ வைத்திருக்கிறீர்கள் என்று புன்னகைத்தார். ஆமாம் என் ஸ்டுடியோவின் பெயர் " ஜே ஸ்டுடியோ".  இரண்டு 'ஜே' க்களுமாக சேர்ந்தே சிரித்தோம். பொன்னீலன் ஐயா நடமாடி திரிந்த காலங்களில் அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி என் ஸ்டுடியோவிற்கு அவ்வப்போது வந்துவிடுவார். இப்போதெல்லாம் யார் துணையுமின்றி அவர்களால் வெளி வர இயலாது. குழந்தையைப்போல இருக்கிறார்.

கோவில்பட்டிக்கு  கார் கிளம்பியது. ஜேயுடன், தம்பி ராகுல் சே யும்  வந்திருந்தார். ராகுல் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர். கோவில்பட்டி வரை ஜே பூமணியை பற்றிய தகவல்களை எங்களுக்கு சொல்லியபடியே முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். மனிதர் தூயவெள்ளைநிற சட்டையை அவ்வளவு நேர்த்தியாக அணிந்திருப்பார் தெரியுமா! ஒரு நாளைக்கு இரண்டு சட்டைகளை மாற்றி அணியக்கூடியவர்.  கூட்டுறவுத் துறையில் மிக நேர்மையான  அதிகாரியாக இருந்தவர்.'ஜே' சொல்லச் சொல்ல  எழுத்துக்களை தாண்டி பூமணி என்கிற ஆழுமையின் சித்திரம் என்னை ஆட்கொண்டது.  முதலும் இறுதியுமாக நான் அவரை சந்திக்க போகிறேன்.

தன் மண்ணையும்  கரிசல் வாசனையையும் நேசித்தவர். எழுத்துகளில் தங்களது வரலாற்றை மிக நேர்த்தியாக கலந்து  தந்தவர்.அவரது படைப்புகளை பற்றி முகநூல் முழுக்க பல தகவல்கள் விரவிக் கிடக்கிறது. அஞ்ஞாடி படித்த பின்னரே,  நானும் தம்பி  ஸ்காட்டும் முன்பொருநாள் வெட்டுவான்கோவிலை பார்க்க கழுகுமலைக்கு கிளம்பிப் போனோம்.

தனது கடைசி காலங்களில் பூமணி அய்யா கடுமையான நரம்புத் தளர்ச்சியில் சிரமப்பட்டார் என்று சோ.தர்மர் கைகளை உதறியபடி வருந்திச் சொன்னார். நினைத்துப் பார்க்கவே முடியவில்லை எழுத்தாளரின் கைகள் முடிங்கிப்போவது எத்தனை துயரம். writer's block என்கிற 'எழுத்து தடை' என்பது இயல்பாக பல எழுத்தாளர்களுக்கு ஒருசில காலங்களில் ஏற்படுவதுண்டாம். அது ஒருவித மனத்தடை. நரம்புத் தளர்ச்சி என்பது முற்றிலுமாக ஒருவரை முடக்கிப் போடுவது. இன்று காலம் அவரை கபளீகரம் செய்து கொண்டது.

மாலையான பின்னரும் கோவில்பட்டியில் சூடு தணியவில்லை. வெக்கை கதகதவென சட்டைக்குள் முதுகின் பிளவில் வழிந்தோடியது. பூமணி அய்யா ஃபிரீசர் பாக்ஸில் அஞ்சாடி நூலுடன் அமைதியாக படுத்திருந்தார். வெள்ளை வெளீரென்ற அந்த நெடிய உயரமான மனிதர்க்கு தனது இறுதி யாத்திரைக்கான வெண்மையான ஆடையை அணியவைத்து கிடத்தியிருந்தார்கள்.  தலைமாட்டிலிருந்த திருவிளக்கு   தெற்கு நோக்கிய ஒற்றை நாக்கில் திரி சமைந்தபடி ஒளிர்ந்தது. அவருடைய வீரியமான எழுத்துக்கள் கரிசல்காட்டின் வடலிகளைப்போல் வருகிற காலமெல்லாம் நிற்கும். 

அஞ்சலியாக மலர் தொடுப்பினை வைத்து வணங்கி நின்றோம். இன்று அரசு மரியாதையோடு அவரது தூய வெள்ளைநிறம் அடக்கம் செய்யப்பட்டிருக்கும். தமிழ்கூறும் நல்லுலகம் பூமணியை திரும்பத்திரும்ப காலத்திற்கும் வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே நாம் அவருக்கு செய்கிற  உண்மையான அஞ்சலி...

 #Jawaharclicks #litterature #condolences #poomani

Comments