நாட்டார் நம்பிக்கைகள் "சக்கைப்பழம்"
'சக்கைப்பழம்'
குமரி மாவட்டத்தில் பலவிதமான நம்பிக்கைகள் உண்டு. அவையெல்லாம் நாட்டார் பண்பாட்டின் எச்சங்கள். சிலவை காலத்தின் சுழற்சி, நாகரிகம், தொழில் நுட்பம் ஆகியவற்றின் வேகமான வாழ்க்கை கடத்துதலால் ஒழிந்து போனது. வெள்ளைச் சேலை கட்டிய பெண் எதிரே வந்தால், பூணை குறுக்கே பாய்ந்தால் என இவற்றை கெட்ட சகுனங்களாக பார்ப்பதெல்லாம் இப்போது வழக்கொழிந்து போனது.
நான் பைக்கில் வெளியே கிளம்பி வருகிற போது ஜானகி பாட்டியும் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே வருவார்.என்னை பார்த்ததும் பாதையின் ஓரத்தில் ஒதுங்கி நின்றுவிடுவார். நான் வண்டியை நிறுத்தி நலம் விசாரிப்பேன். ஆனாலும் அவர்களது முகத்தில், உடல் மொழியில் ஒருவித தயக்கம் காணப்படும்.
' சோலிக்கு போறீயாப்பா! என்ற கேள்வியோடு தயங்கிபடி நிற்பார். சூழலை சமன்படுத்தும் விதமாக எதையாவது அவரோடு பேசிவிட்டு நகர்ந்து போவது வழக்கம்.
நேற்று நண்பன் சேகரை பார்க்க போனேன். கிளம்பும் போது ஒரு சக்கைப்பழத்தினை தூக்கி வந்து தரையில் வைத்துவிட்டு, வீட்டுக்கு எடுத்திட்டு போ என்றான். கைகளில் தரக்கூடாதாம்? நட்பு கெட்டுவிடும் உறவுக்குள் சண்டை வருமாம். சக்கைப்பழத்தினை சும்மா யாருக்கும் கொடுப்பதில்லை என்கிற வழக்கமும் இருக்கிறது. ஒத்தை ரூபாயாவது வாங்கிவிட்டு கொடுக்கிற வழக்கம் உள்ளது.
அந்தி சாய்ந்த பிறகு ஊசியினை அடுத்தவருக்கு கொடுப்தில்லை. உறைக்கு தயிர் தருவதில்லை.
விளக்கு வைத்தபிறகு பணம் பரிமாற்றம் கிடையாது.
( உழைத்த பணத்தை பெறுவதற்கே இங்கே குட்டிக்கரணம் போட வேண்டியுள்ளது)
எங்கள் குமரியில் சக்கப்பழம் என்பது உங்கள் ஊரின் பலாப்பழம்.
சக்கபழத்தை அதன் சுவையை முன்வைத்து ஒரு சொலவடை சொல்வதுண்டு. "சக்கை ஆசையும் மக்க ஆசையும் தீராது" என்று. திகட்ட திகட்ட சக்கைச்சுளைகளை தின்றாலும் ஆசை தீராது.அது போலவே மழழைகளை கொஞ்சுவதும் தீராத தேனின்பம் என்பார்கள்.
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு எங்க வீட்ல ஒரு சக்கைமரம் நின்றது. அதன் வயிற்றுப் பகுதி தடித்து பருத்திருந்தது. நன்கு வளர்ந்த ஒருவரால் இரண்டு கைகளாலும் மரத்தினை கட்டி அணைக்க முடியாத அளவிற்கு தடிமனாக வளர்ந்திருந்தது. காய்க்கவில்லை தினமும் நாங்கள் மரத்தில ஏதாவது களை பிடிச்சிருக்கிறதா என பார்ப்பது வழக்கம். களை என்றால் பிஞ்சு காய் என்பதாகும். களைகள் பிடிக்கும் பின்னர் அவை உதிர்ந்து போனது.எங்கள் ஆத்தா சொன்னார்கள் மரத்திற்கு இரும்பு சத்து குறைவினால்தான் இப்படியாக களைகள் உதிர்ந்து போகின்றன என்று அதற்கு ஒருவழி செய்ய சொன்னார்கள். பழைய தகர டின் ஒன்றினை நான்காக மடித்து தண்ணீரில் இரண்டு நாட்கள் ஊரவைத்து பின்னர் மரத்தின் இரண்டு கிளைகளுக்கிடையே சொருகி வைக்க சொன்னார்கள்.அவ்வாறு வைத்த பின்னரும் சக்கைபழம் காய்க்கவில்லை வருத்தமே மிஞ்சியது.பழைய பிஞ்ச செருப்பு, பிய்ந்த வாரியல், பழைய மீன் வைக்கிற மண்சட்டி அதில் கரும்புள்ளி செம்புள்ளி வரைந்து அவற்றையெல்லாம் சேர்த்து மரத்தில் கட்டச் சொன்னார்கள். மரத்திற்கு கண்பேறு பட்டிருக்கிறது என்றாள் ஆத்தா. மனிதர்களின் கண்கள் பெல்லாதது. சொல்லடியைக் காட்டிலும் கண்ணடி கூரானது. பழைய சாஸ்திரங்களும் மந்திரங்களும் சும்மாவொன்றுமில்லை என என்பது வயது ஆத்தா எங்களிடம் மல்லுகட்டி நின்றார். சக்கமரம் பழம் காய்க்க வேண்டும்.
நிறைந்த அம்மாவாசையன்று நடு ராத்திரியில் அரவமற்ற நடுநிசியில் நிர்வாணமாக ஒருவர் சக்கைமரத்தின் கீழ் நிற்க வேண்டும்.கைகளில் கூரான வெட்டுகத்தியினை பிடித்திருக்க வேண்டும். கண்கள் சிவக்க
"ஏ சக்கமரமே காய்க்க போகிறாயா! இல்லை, இப்போதே உன்னை வெட்டித் துண்டுதுண்டாக வெட்டிப் போடமட்டுமா" என கையிலிருக்கும் வெட்டுக்கத்தியினை
ஓங்கி உயர்த்தி மரத்தை பார்த்து கர்ச்சிக்க வேண்டுமென்றாள் ஆத்தா. இது மட்டுமே வேலைக்காகும் அப்போதே மரம் காய்க்கும் களை மரத்தில் தங்கும்.ஆத்தாவிற்கு இந்த நாட்டார் நம்பிக்கையில் நம்பிக்கை இருந்தது.
ஆத்தாவிற்கு நாங்கள் நான்குபேர்கள் ஆண் பேரப்பிள்ளைகள். இப்போது இந்த செயல்முறை சம்பவத்தினை எங்களில் யாராவது ஒருவர் செய்ய வேண்டுமென்றார்.நிர்வாணம் என்பதே மிகப் பெரிய டாஸ்க்காக எங்கள் முன் நின்றது. கடைக்குட்டி ஏழுவயது தம்பிக்கு மட்டுமே அம்மணமாவதில் பிரச்சினை இல்லையென்றான்.ஆனால் அவனுக்கோ நடு இரவும் வெளிச்சமற்ற இரவும் பயமென நடுங்கினான். எப்படியே சக்கபழம் வேண்டுமல்லவா உனக்கு என்று அவனுக்கு ஆசையை ஊட்டினோம்.
ஆத்தா நாள் குறித்தாள் . "வருவது நிறஞ்ச அம்மாவாசையாக்கும்" என்றாள். பொடியனை நடு இரவு வரை முழித்திருக் வைப்பது பெரும் பாடாக இருந்தது. எல்லோருமாக சேர்ந்து வளவில் போய் அவனது நிக்கரை உருவி, கைகளில் வெட்டுகத்தியை கொடுத்து அம்மணமாக சக்கை மரத்தை பார்த்து ஓட விட்டோம். மரத்தின் மூட்டில் நின்ற கடைக்குட்டி
"ஏய் சக்கமரம் உன்னை வெட்டுவேன் குத்துவேன் என தத்தைக்கா பித்தைக்காவென அந்த இருட்டின் பயத்தில் என்னவெல்லாமோ உளரியபடி ஓங்கி ஒரு வெட்டு வெட்டிவிட்டு தலை தெரிக்க ஓடிவந்து நிக்கரை அணிந்து கொண்டான் கடைக்குட்டி பொடியன். அந்த காட்சி சிறுவர்களான எங்களுக்கு நகைச்சுவை கலந்ததாக நடந்தேறியது.
காலமும், பொழுதும் தினசரி விடிந்தும் அடைந்தும் ஒரு சில அம்மாவாசைகளையும் பெளர்ணமிகளையும் கடந்தபடி ஓடியது.சக்கை மரத்தில் ஒரு களை பிஞ்சு சக்கைப்பழமாக பிடித்து நின்று வளர்ந்தது. ஆத்தாவின் நம்பிக்கை பலன் தந்தது. சுமார் நான்கடி உயரத்திற்கு ஒரு மொரட்டு சக்கப்பழம் காய்த்தது. ஒரே ஒரு காய். அதன் முட்கள்நன்றாக விரிந்த பிறகு கயறுகட்டி வெட்டி இறக்கினோம். கனத்துகிடந்தது சக்கைப்பழம்.
சக்கப்பழமெல்லாம் தனி ஒருவராக சாப்பிட முடியாது. குடும்பமாக கூடியமர்ந்து வெட்டி உண்ண வேண்டும். வெட்டுவதற்கும் ஒரு லாவகம் வேண்டும். பழத்தை வெட்டுவதற்கு முன் அதன் பால் கைகளில் ஒட்டாமல் இருக்க எண்ணை வைத்திருக்க வேண்டும்.
அன்று கார்த்திகை மாதம் தெருவெல்லாம் தீபங்கள் ஏற்றியிருந்தார்கள். வெளிச்சம் எங்கும் பரவியிருந்தது. எங்கள் வீட்டின் செம்பருத்தி சக்கையின் சிவந்த சுளையின் மணம் தொருவெங்கும் வியாபித்திருந்தது.
- ஜவஹர்.ஜி
- 20/06/2026
Comments