Sunday, December 23, 2007

க‌ண்ணீருட‌ன் - என் இத‌ய‌ அஞ்ச‌லி...
2004 டிசம்பர் 27 காலை....

மாவட்ட ஒட்டு மொத்த நிர்வாகமே குளச்சலில் இறந்து போன 540 பேர்களை அடக்கம் செய்வதற்காக குழுமியிருந்தனர்...

அன்றைய பத்திரிகை செய்திகளைப் படிக்கும் போது மிக பயங்கரமாக இருந்தது. தெற்காசியா முழுவதுமாக சுனாமி துவம்சம் செய்து அழித்து போட்டிருந்தது என,நாகர்கோவிலிருந்து 14கிமி தொலைவில் உள்ள மணக்குடி என்ற கடற்கரை கிராமத்தில் சுனாமி தன் முழு தாக்குதலையும் அரங்கேற்றியிருந்தது.

அந்த அழிவுகளை பதிவு செய்ய அங்கே சென்றேன் கிராமத்துக்குள்ளே நுழையவே முடியவில்லை நுழைவுப் பகுதியில் சமீபத்தில் புதியதாக கட்டியிருந்த [மணக்குடியையும் கீழமணக்குடியையும் இணைக்கும் ] பாலத்தையே காணவில்லை,நான்கு கான்கிரிட் துண்டுகளை இணைத்து அந்த பாலம் கட்டியிருந்தனர்.அதில் இரண்டு துண்டுகளை இன்று வரை காணவில்லை, சுனாமி அலைகளின் வேகத்தை அந்த பாலத்தின் அழிவில் உணரமுடிந்தது.


அடுக்கு மாடி வீடுக‌ளை த‌ரைம‌ட்ட‌மாக‌ ஆக்கி போட்டிருந்த‌து சுனாமி,ஒரு க‌ட்டும‌ர‌த்தை தூக்கி உய‌ர‌மான இர‌ண்டு மாடி க‌ட்டிட‌த்தின் மேல் வைத்திருந்த‌து அலைக‌ள். சுனாமி அலைகள் சுமார் மூன்று முறை ஊரை நோக்கி சீறிவ‌ந்துள்ளது,கும‌ரி மாவ‌ட்ட‌த்திலேயே சுனாமியின் அதிக‌ப‌டியான‌ தாக்குத‌லுக்கு உள்ளான இடம் ம‌ண‌க்குடி, கீழ்ம‌ண‌க்குடி கிராமங்கள் தான்.அங்கிருந்த‌ காவ‌ல் துறையின‌ர் செய்வ‌த‌றியாது திகைத்து நின்ற‌ன‌ர் கார‌ண‌ம் ஊர் முழுவதும் இற‌ந்த‌வ‌ர்க‌ளின் ச‌ட‌ல‌ங்க‌ளாக‌ சித‌றிகிட‌ந்த‌து,அந்த உட‌ல்க‌ளை அட‌க்க‌ம் செய்ய‌ வேண்டும் ஆனால் அவ‌ர்க‌ளை அடையாள‌ம் செல்ல‌ யாரும்மில்லை.சுனாமியின் சீற்ற‌த்தினால் இற‌ந்த‌வ‌ர்க்ளின் உட‌ல்க‌ளையும்,உட‌மைக‌ளையும் அப்ப‌டியே அங்கேயே விட்டுவிட்டு உயிர் த‌ப்பி சென்றிருந்த‌ன‌ர் ஜ‌ன‌ங்க‌ள்.அங்கு சென்ற‌ நான் இற‌ந்த‌வ‌ர்க‌ளை ஒவொருவ‌ரையும் நான் கேமிராவில் ப‌திவு செய்து கொள்கிறேன் பின்பு அடையாள‌ம் காண‌ அவை ப‌ய‌ன்ப‌டும் என்றேன்.இர‌ண்டு காவ‌ல‌ர்க‌ள். நான் மற்றும் இர‌ண்டு ந‌ப‌ர்க‌ள்.அந்த‌ ஊரின் பாதிரியார் ஆகியோர் தயாராகி கிள‌ம்பி சென்றோம்.
உள்ளே செல்ல‌ பாதைக‌ள் சீர‌ழிந்து கிடந்ததால் முள்காடுக‌ளின் வ‌ழியே நுழைந்து சென்றோம்.உடைந்த‌ வீடுக‌ளின் க‌த‌வுக‌ளில் வைத்து உட‌ல்க‌ளை தூக்கி வ‌ந்த‌ன‌ர் அந்த‌ இருவ‌ரும்,ஊரின் மையாவெளியில் உட‌ல்களை சேக‌ரித்து வைத்தோம், நான் ஒவ்வொரு உட‌ல்க‌ளையும் முழுவ‌துமாக‌வும்,முக‌த்தை ம‌ட்டும் க்ளோச‌ப்பாக‌வும் இரு ப‌ட‌ங்கள் என‌ ப‌திவுக‌ள் செய்துகொண்டேன். அருகில் நின்ற‌ காவ‌ல‌ர்க‌ள் இற‌ந்துபோன‌வ‌ர்க‌ள் அணிந்திருந்த‌ உடைக‌ளின் நிற‌ம்,அங்க அடையாள‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றை குறிப்பெடுத்துகொண்ட‌ன‌ர்.முக‌ங்க‌ளை திருப்பி வைத்து ப‌ட‌ம் ப‌திவு செய்யும் போது வாய்க‌ளிலிருந்து நுரை த‌ள்ளியது. க‌ட‌ல் நீர் குடித்தே இற‌ந்து போயிருந்த‌ன‌ர்,சில‌ர‌து முக‌ங்க‌ள் அடிப‌ட்டு சிதைந்திருந்த‌து இர‌த்த‌ம் வ‌டிந்த‌து.இற‌ந்து போய் ஒரு நாள் ஆன‌தால் லேசாக‌ வாடை வீச‌ தொட‌ங்கியிருந்தது.அதிலும் என் ம‌ன‌தை மிக‌வும் ர‌ண‌மாக்கிய விச‌ய‌ம் எந்த‌ பாவ‌மும் அறியாத‌ பிஞ்சு குழ‌ந்தைக‌ளின் முக‌ங்க‌ளை பட‌ப்ப‌திவு செய்யும் போது ஏற்ப‌ட்ட‌து என் விழிக‌ளின் நீர் வ‌டிந்தோடிய‌து,உள்ளம் நொறுங்கிபோன‌து.ஊரே அழிந்து கிட‌ந்த‌தால் குடிப்பத‌ற்கு கூட‌ த‌ண்ணிர் கிட்ட‌வில்லை எம‌க்கு,கையுரையும்,முக‌த்தில் க‌ட்ட‌ மாஸ்க்கும் இல்லாம‌லே எங்க‌ள‌து ப‌ணி தொட‌ர்ந்தோம்.பொக்க‌லைன‌ர் வ‌ர‌வ‌ழைக்கப‌ட்டிருந்தது. அத‌ன் மூல‌ம் ஒரு பெரிய‌ குழி தோண்டி அன்று முழுவ‌தும் நாங்க‌ள் சேக‌ரித்த‌ உட‌ல்களை ஒட்டு மொத்தமாக குழிக்குள் இழுத்து போட்டு அடக்கம் செய்தோம்.க‌ண்க‌ளை முடி பிராத்தித்தேன். இறைவா இவ‌ர்க‌ளின் ஆன்மாவிற்கு இளைப்பாருதலை கொடும் என்று,பொக்க‌லைன‌ர் ஓட்டி வ‌ந்த‌வ‌ரை பார்த்தேன் சபரிமலைக்கு மாலையணிந்திருந்தார் அவ‌ரும் இருக்கையில் அம‌ர்ந்த‌வாரே கைக‌ளை குவித்து வேண்டிக்கொண்டிருந்தார். சுனாமி ம‌த‌ம்,சாதி அத்த‌னையும் க‌ட‌ந்து ம‌னித‌ ம‌ன‌ங்க‌ளை இணைத்து போட்ட‌து.உத‌வும் க‌ர‌ங்க‌ளை கொண்டு சேர்த்திருந்த‌து.
என்னுள்ளே...ஒரு வித‌ ஆத்ம‌ திருப்தி. நான் செய்கின்ற‌ தொழில் மூல‌மாக கருவி முலமாக‌ இந்த‌ ச‌முதாய‌த்திற்ககு பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின்பும் மூன்று நாடகள் தொடர்ந்து உட‌ல்க‌ளை அடையாள‌ம் காணும் ப‌ணிக்காக என்னை ஈடு ப‌டுத்திக்கொண்டேன்....
தொட‌ர்ந்து 28 நாட்க‌ள் சுனாமி தாக்குத‌லுக்கு உள்ளான‌ க‌ட‌ற்க‌ரை கிராம‌ங்க‌ளிலேயே சுற்றி வ‌ந்து என‌து ப‌ட‌ப்ப‌திவுக‌ளை செய்தேன்,
என‌து ப‌திவுக‌ளையெல்லாம் க‌ண்காட்சியாக‌ க‌ண்ணீருட‌ன் என்ற‌ த‌லைப்பில் புகைப்ப‌ட‌க‌ண்காட்சிவைத்து அதில் கிடைத்த‌ ரூபாய் 20000 ஆயிர‌ங்க‌ளை முதல‌மைச்ச‌ரின் சுனாமி நிதிக்கு அளித்து ம‌ன‌நிறைவு பெற்றுக்கொண்டேன். வ‌ருகின்ற‌ டிச‌ம்ப‌ர் 26 2007 மூன்றாவ‌து நினைவு நாளில் சுனாமியில் இறந்துபோன‌ அத்த‌னை உள்ள‌ங்க‌ளுக்கும் என் இத‌ய‌ அஞ்ச‌லி...

Wednesday, December 12, 2007

மீண்டும் கண்ணீருடன்‍‍ 2004 சுனாமி


2004 டிசம்பர் 26 காலை 9।30 மணி.....

எனது புகைப்படப் பதிவுகளை பணி முடித்து திரும்புகிறேன்...

ஏய் ஓடுங்க... ஓடுங்க... கடலு உறப்பாகிடக்கு, எங்கும் ஒரே கூக்குர‌ல், புழுதிப‌ற‌க்க‌ ம‌க்க‌ள் ஓடுகிறார்க‌ள்...

நானும் ப‌ற‌க்கிறேன் என‌து பைக்கில், க‌டியப்ப‌ட்டிண‌ம் என்கிற‌ கும‌ரி மாவ‌ட்ட‌ க‌ட‌ற்க‌ரை ஊர் சாலையில்... இரத்தம் சூடாகி இதயம் பட‌படப்பாகி,கண்களில் மிரட்சியொடு பைக்கில் பறக்கிறேன்...மேட்டு பகுதியை நெருங்கும் வேளையில் அசுரத்தனமாக‌ வேகத்தோடு சுழன்று வந்த கடல் நீர் என்னை பைக்கோடு சூழ்ந்து கொண்டது, அடித்து ஒதுக்கியதில் ஒரு தொலைபேசி கம்பத்தை இறுக்கமாக சுற்றிபிடித்து கொண்டேன்.இறைவன் அருளால் உயிர் பிழைத்து இன்று உங்களேடு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்...ஐந்தே நிமிடங்களில் அந்த கடற்கரை ஜனங்களின் வாழ்வே தொலைந்து அடியோடு உருக்குலைந்து போய்விட்டது,ஐந்து நிமிடங்களில் அந்த ஊரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 44 பேர்கள்,என்னுள் உருவான ஒரு அசூரத்தனமான மனத்தைரிய‌த்தோடு கண்களில் கண்ட காட்சிகளையெல்லாம் பதிவு செய்கிறேன்,அத்தனையும் கோரக்காட்சிகள்,ஒரு புகைப்பட கலைஞனுக்கு இந்த சமுகத்தின் மேல் உள்ள பொறுப்புகளை உணர்ந்தவனாக சுனாமி என்கின்ற இயற்கை பேரழிவை, அதன் தாக்கத்தை, உடுக்க துணியின்றி உண்ண‌ உண‌வின்றி, கணப்பொழுதில் வீடுகளை இழந்து அகதிகளாகிப்போனவர்களை, உறவுகளை தொலைத்து தவிப்பவர்களை, மருத்துவமனை வளாகங்களில் வந்து குவியும் சடலங்களை, என பதிவுகளை செய்தேன்.

காலையில் 5 மணிக்கு நான் வீட்டிலிருந்து கிளம்பிய நான் அன்று வீடு திரும்பும்போது இரவு 12 மணி ஆகியிருந்தது।அன்று முழுவ‌தும் எதுவும் சாப்பிடவில்லை நான்.


விட்டில் என்னை சுற்றி பெரும்கூட்டம் எல்லாம் விசாரிப்புகள்.காரணம் அன்றைய மாலைமலர் பத்திரிகையில் கடல் அலையில் உயிர்பிழைத்த போட்டோகிராபர் என‌ எனது பேட்டி வெளியாகியிருந்தது.
இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை,கடல் அலையின் இறைச்சலும்,இடுப்புவரை சுழன்று வளைத்து அடித்த கடலின் வேகமும்,கண்களில் கண்ட கோரக்காட்சிகளும்,மனதில் ஓட தூக்கம்மின்றி புரண்டு புரண்டு படுத்துகிடந்தேன்।


தனியொரு ஆளாக 112 இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ததை அடுத்த இடுகையில்...

Thursday, December 6, 2007

டிசம்பர் மாத போட்டிக்கான படங்கள் -மலர்கள்

பூவுக்குள் ஒரு சூரிய உதயம்


பூவுக்குள் ஒரு விருந்து

மிக‌ அருமையான தலைப்பு மல‌ர்கள்

இத‌ழ்க‌ள் மீது ப‌டுத்தும், ம‌க‌ர‌ந்த‌ துக‌ள்களில் புர‌ண்டும், தும்பிக‌ள் குடிக்க‌யிருந்த‌ தேன் துளிக‌ளை அருந்தியும், வாசனையை நுகர்ந்து வந்த அனுபவம் எமக்கு...

கிடைத்த ஒரு சில மல‌ர்களை சரமாக தொடுத்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.
குமரியிலிருந்து ஜவஹர்ஜி...

நி பாதி நான்பாதி


இரட்டையர்கள்


பெயர் தெரியவில்லை‍ இருந்தலும் அழகுதான்