Wednesday, August 29, 2007

சண்டே ஸ்பெஷல்- அலையாத்தி பகுதி 3

அலையாத்தி சதுப்புநிலகாடு

குச்சி போன்ற அடிப்பகுதி

சண்டே ஸ்பெஷல்- அலையாத்தி பகுதி 2

கயலில் படகு
நீர் பறவைகள்

சண்டே ஸ்பெஷல்-அலையாத்தி

காயலின் எழில் தோற்றம்உடைந்த பாலத்தின் ஒரு துண்டு


தற்காலிக பாலம்


பொழிமுகம்

ஞாயிற்று கிழமை வந்துட்டாலே எங்க? அவுட்டிங் போறதுன்னு பெரிய சர்ச்சையே நண்பர்களிடையே வந்துடும். இந்த வாரம் மணக்குடி காயலில் போட்டிங் போலாம்ன்னு முடிவானது.
சுனாமி தாக்குதலுக்கு பிறகு மணக்குடி பழையாறு காயலில் புதுசா போட்டிங் வசதி ஏற்பாடு பண்ணியிருக்காங்க. நாகர்கோவிலிருந்து 15கிமி தூரத்தில் உள்ளது மணக்குடி கடற்கரை கிராமம். மணக்குடி ஊரின் நுழைவு பகுதியில் தான் பழையாறு கடலோடு கலக்கும் [பொழிமுகம்] உள்ளது. கீழமணக்குடியும் மேல மணக்குடியும் இணைக்கும் பாலமும் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் இயற்கையின் எழில்மிகு வனப்புகளை ஒருசேர பார்க்கலாம். ஒரு பக்கம் தெளிவான காயல் நீர், இன்னொரு பக்கம் நீலக்கடல் சுற்றிச்சூழ அரண்போல மலைப்பகுதி, மருந்துவாழ்மலையும் தெரிகிறது. இராவணன் தூக்கி சென்ற சஞ்சிவி மலையிலிருந்து கீழே விழுந்த சிறு துண்டு தான் மருந்துவாழ்மலை அத்தணை மூலிகை செடிகளும் அந்த மலையில் இன்றும் உண்டு.
சுனாமி தாக்குதலில் சிதறிப்போன பழைய பாலம் படகுத்தளத்தின் பக்கம் ஒரு துண்டும் மறுபக்கம் இன்னொறு துண்டுமாக இன்றும் சுனாமியின் வேகத்தினை நாம் உணரும் விதமாக கிடக்கிறது. நான்கு துண்டுகளை இணைத்து இந்த பாலம் கட்டியிருந்தனர் ஒவ் ஒரு துண்டும் 3000 டண் எடையுள்ளது இதில் இரண்டு துண்டுகளை சுனாமி அலைகள் எங்கு தூக்கி வீசியது என்றே இன்னும் தெரியவில்லையாம். ஒரு பிரமாண்டமான பாலத்தையே காணமல் செய்திருந்தது சுனாமி அலைகள் பிரமிப்பாகவும், அதிர்ச்சியுமாக இருந்தது.
படகில் பயணம் செய்ய தலைக்கு 15ரூபாய் வசூலிக்கின்றனர் காயலில் சுமார் 1கிமி அழைத்து செல்கின்றனர் அது ஒரு திரில் பயணம் பாருங்கள். வழிநெடுக கரையில் வரிசையாக தென்னை மரங்கள் வெயிலுக்கு குடை பிடித்தது போல உள்ளது, நீரில் மூழ்கி தலையை மட்டும் வெளியில் காட்டும் நீர்பறவைகள், நீண்ட கழுத்து கொண்ட வெளிநாட்டு பறவைகள், துள்ளிகுதிக்கின்ற மீன்கள் என மிக குதூகலமாக உள்ளது. இதற்கெல்லம் மகுடம் வைத்தது போல காயலின் நடுப்பகுதியில் ஆங்காங்கே மாங்குரு தீவுகள் சதுப்பு நிலக்காடுகள் உள்ளது, அடர்த்தியாக உயரமாக வளர்ந்த அலையாத்தி மரங்கள், சுராபுன்னை மரங்கள் என அரிய வகை மரங்கள் உள்ளன.
இந்த அலையாத்திமரங்களின் மேல் பகுதி ஒரு ஆலமரத்தை போன்று அடர்த்தியாக உள்ளது கீழ் பகுதி சின்ன சின்ன குச்சி போன்று நெருக்கமாக அமைந்துள்ளது. இந்த அலையாத்தி மரத்தின் சிறப்பே அலையின் வேகத்தினை தடுக்கும் வலிமை உண்டாம். சுனாமிக்கு பிறகு இந்த மாங்குரு காடுகளை [ MANGROVE AFFORESTATION PROGRAMME ] என்று தனி கவனத்துடன் வளர்த்து வருகின்றனர்.
உண்மையிலே இந்த பயணம் நண்பர்களிடையே மிக சந்தோசமாக இருந்தது மட்டுமல்லாமல் இயற்கையை பற்றிய ஒரு நேசமும் வரச்செய்தது. மனிதர்களுக்கு இயற்கை ஒரு வரப்பிரசாதம்தான். மரணத்திற்க்கு பின்பு சொர்க்கம் என்பதெல்லாம் கட்டுக்கதை வாழும் போதே இயற்கையை ரசிப்போம், பேணிபாதுகாப்போம், அதனோடு இணைந்த ஒன்றித்த வாழ்வை வாழ்ந்து சொர்க்கத்தை அனுபவிப்போம்.

Monday, August 27, 2007

நெய்தலில் ஒரு நல்முத்து

[நாகர்கோவில் பண்பலை வானொலியில் ஆகஸ்ட் 16ம் தேதி இரவு எட்டு மணிக்கு ஒலிபரப்பான இளையபாரதம் நிகழ்ச்சியில் பிரபல பத்திரிகையாளர், குறுமபட ஆவண பட இயககுனர் திரு. டி. அருள் எழிலன் அவர்களுடைய பேட்டியின் சுருக்கம்]


இவர் குமரி மாவட்டம் புத்தன் துறை என்கிற இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கடற்கரை கிராமத்தை சேர்ந்த இளைஞர் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.தகப்பனார் திரு.ஆ.தாமஸ் நல்லாசிரியர் விருது வாங்கி ஓய்வு பெற்ற ஆசிரியர்,தாயார் திருமதி.பொன்னம்மா இறைவனடி சேர்ந்துள்ளார்
.தனது எண்ணங்களையும்,கருத்துக்களையும் விசாலமாக்கி,பார்வையை கூர்மையாக்கி பல எளிய சாமானிய ஆளுமையுள்ள மனிதர்களை வெகுஜன ஊடகத்தின் முலம் வெளியுலகிற்கு அறிமுகம் செய்து உலாவர செய்ததால் தமிழகத்தின் சிறந்த இளைஞர் என்று பிரபல் இதழான இந்தியா டுடே 2007- 2008 ம் ஆண்டுக்கு தேர்வு செய்து விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

அருள் எழிலன் தனது எழுத்தின் முலம் இந்த பிரபஞ்சத்தின் வாழுகின்ற மனிதர்களை அதுவும் சாதரண மனிதர்களை,எளியோர்களை,எந்தவித அதிகாரமும் தனக்கில்லாத மனிதர்களை அவர்கள் வாழும் வாழ்க்கையை,அடிப்படை வாழ்வாதரத்திற்க்காக படும் துயரங்களை,தன்னை இந்த சமுகத்தில் தக்கவைத்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் முயற்சிகள்,அந்த தனி மனிதன் இந்த சமுகத்திற்கு எடுத்துகூறும் உதாரண தகவல்களையும் மிக உன்னிப்பாக கவனித்து நமக்கு ஊடகங்களின் மூலமாக வெளிக்கொணர செய்கிறர்.

சிற்பி வெறும் கல்லில் அதனுள் உள்ள வடிவத்தையும் கலை படைப்பை மட்டும் தனது தனிப்பார்வையால் செதுக்கி வெளிக்கொண்டு வருவது போல இவர் தனது எழுத்துக்கள் மூலம் பேனா முனை மூலம் சாமானியர்களின் பரிமாணங்களை நமக்கு தெரிவிக்கிறார்.அவர்கள் மேல் இவருக்குள்ள வாஞ்சனையும் நம்மல் உணரமுடிகிறது.இவரிடம் உள்ள மனித நேய பார்வையால்தான் இவரால் ஒரு நல்ல ஆவணப்பட, குறும்பட இயக்குனராகவும், எழுத்தாளராகவும் வலம் வரச்செய்து இன்று ஒரு வெற்றி நாயகனாக்கியுள்ளது.

இன்றைய இளைஞர்கள் இளம் வயது முதல் நல்ல புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.தனக்குள்ளே உள்ள படைப்பாற்றலை மேம்படுத்த புத்தகம் படிப்பது மூலம் வளமை ஆக்கலாம் என தெரிவித்தார். இளைஞர்கள் சாதிக்கப் பயணப்படும்போது தகுதிகளை வளர்த்துக் கொண்டு தெளிவான முடிவுகளோடு செயல்படவேண்டும் என்றார்.
வெற்றிப் பெற்ற சாதனையாளர்கள் ஒவ்வொருவரும் தனியாளாக எதையும் சாதிப்பதில்லை என்பதை தெளிவு பட கூறினார். சாதனையாளர்கள் ஒவ்வருவொரின் பின்பும் இந்த சமூகம் பல விதங்களில் பின் புலமாகவும் முன்னேற துணை புரிகிறது என்றும், வெற்றி பெற்றவர்கள் ஒவ்வருவரும் இந்த சமூகத்திற்கு நன்றி கடனாக செய்யவேண்டிய கடமைகள் நிறைய உள்ளன என நினைவுப் படித்தினார்.
அருள் எழிலன் அவர்களுடைய வானொலி உரை இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் தரும் நம்பிக்கை வார்த்தைகளாகவே இருந்தது. இந்த இளம் சாதனையாளரை என்னுள் உள் வாங்கியவனாக மண்ணின் மைந்தன் என்ற வித்ததில் பெருமை கொள்கிறேன். அவருடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Thursday, August 23, 2007

கண்ணிருந்தும் குருடர்களாகிறோம்


வருத்த பார்வை-இடம் பாளையங்கோட்டை கோபலசாமிகோவில் சுமார் 1000 வருடங்கள் பழமையானதுநான் சிறுவனாக பாளையங்கோட்டையில் சுத்திவரும்போது மிக கம்பீரமாக நின்ற கோபாலசாமி கோவில் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. களையிழந்து அத்தனை சிலைகளும் உடைந்து சிதிலமடைந்து போயுள்தை காணநேர்ந்தது. இது கோபுரத்தின் ஒரு பக்க பகுதி.பாதுகாக்கபடவேன்டிய அறிய புரதாணா கலைபொக்கிசங்களை நம் இத்தனைநாள் அழியவிட்டு வேடிக்கைபார்த்தது மிக வேதனையாய்யிருந்தது

Wednesday, August 15, 2007

இசையால் வசமாகாத இதயம் எது


-நேர் காணல்-

முத்தப்பா பாகவதர்

வ்யது - 72

சொந்த ஊர் - ம்றவன் குடியிருப்பு,கன்னியாகுமரி
இசை கலைஞர்கள் பலருடைய பேட்டிகளில் முத்தப்பா பாகவதரை நினைவு கூர்ந்து பேசுவதும் தனது குருநாதர் எனவும் அவரை முன்னிலைப் படுத்தி பேசுவதையும் அடிக்கடிப் பத்திரிகைகளிலும் வானொலி போன்ற ஊடகங்கள் மூலமாகவும் நாம் அறிய முடிகிறது.
யார்? இந்த முத்தப்பா பாகவதர், இசையோடு இசைந்து இவர் வாழ்ந்த வாழ்வு என்ன? என்ற கேள்விகளோடு அவரைக் காண்பதற்காக சென்றோம்.
இசைக்காகவே தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்த அந்த முதியவர் நாகர்கோவிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மறவன் குடியிருப்பு கிராமத்தில் இன்றும் தன்னுடய நாதம் எழுப்பும் ஆர்மோனியப் பெட்டியோடு வாழ்கின்றார்.
பேட்டி என்று அவர் முன்னே நாம் அமர்ந்தவுடன் அவர் கண்களில் ஒரு வித ஒளிபடர்வதையும், விரல்கள் மிடுக்குடன் இசைக்க ஆரம்பித்ததையும் நம்மால் உணர முடிகிறது.


ஐயா உங்களைப் பற்றி?

என்னுடைய பன்னிரெண்டாவது வயதில் நாடக துறையில் பக்க மேளம், பிண்ணனிகுரல், மற்றும் நாடக துறைக் கலைஞர்களோடு தொடர்பு ஏற்பட்டது.
யாரிடம் இசை கற்க ஆரம்பித்தீர்கள்?
பூதபபாண்டியைச் சேர்ந்த இசை மேதை அருணாச்சலம் என்பவரிடம் கர்னாடக சங்கீதம் படிக்க ஆரம்பித்தேன்.
நாடக துறையில் எந்த மாதிரியான நாடக்ங்களுக்கு நீங்கள் இசை அமைத்தீர்கள்?
குமரி மாவட்டத்தில் பல கம்பனி நாடகங்களில் பணியாற்றினேன். பலசமூக விழிப்புணர்ச்சி நாடக்ங்களில் எனது பணி தொடர்ந்தது. சென்னைத் தியாகராஜ நகரில் இயங்கிய நாடக கம்பெனிகளில் இசையமைத்து உள்ளேன். சென்னை வாணிமஹால் அரங்கில் பல நாடகங்களுக்கு இசை அமைத்துள்ளேன்.
நாடக துறையில் எவரோடெல்லாம் உங்களுடைய தொடர்பு இருந்தது?
பழம் பெரும் நடிகர்கள்,பி.யூ.சின்னப்பா, தியாகராஜர்பாகவதர், மற்றும் நடிகர் ஆனந்தன்,எம்.ஜி.ஆர்,சிவாஜி போன்றவர்களிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அத்தனையும் எனக்கு மறக்க முடியாத நினைவுகள்.
நாடக துறையைத் தவிர சினிமாவில் உங்கள் பங்களிப்பு என்ன?
சினிமா துறையில் எனக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை."நினைப்பதுநிறைவேறும்" என்ற படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளேன். இன்னும் பெயரிடப்படாத படத்தில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளேன். படமும் பாடலும் வெளிவராதது எனது துரதிஷ்டம். என்னோடு சிறுவர்களாக சென்னையில் சினிமாத்துறையில் பணியாற்றி வந்த எனது அண்ணன் மகன்கள் பிற்காலத்தில் பிரபலமான ஸ்டண்டு நடிகர்களாக மாறினார்கள். அவரகள் ஜஸ்டின், செல்வமணி, ஆகியோர்க்ளாவார்கள்.
கர்னாடக இசைக்கலைஞர் என்ற முறையில் அந்த காலத்தில் ஊடகங்களில் என்ன தகுதி உங்களுக்குவழங்கப்பட்டது?
ஆல் இந்தியா ரேடியோவில் 'B' கிளாஸ் என்ற தகுதியோடு பாடினேன். சென்னை, பாண்டிசேரி, திருச்சி, திருவனந்தபுரம் போன்ற ரேடியோ நிலையங்களில் பாடியுள்ளேன்.
இசை துறையில் வேறு என்ன பதிவுகள் செய்துள்ளீர்கள்? தங்களுக்கென்று ஏதாவது இசைத் தட்டு வெளியிட்டிருக்கிறீர்களா?
சினிமா பாடல்கள் கலவாத பல நல்ல தமிழ் இசை கச்சேரிகள் நிறைய நடத்தி உள்ளேன். இரண்டு பக்தி பாடல் கேஸட்கள் வெளியிட்டுள்ளேன். வேத மாணிக்க பிள்ளையின்னிறைய தமிழ் பாடல்களுக்கு இசை அமைத்து பாடியும் உள்ளேன். போதுமான பொருளாதார சூழ்நிலைகள் இல்லாததால் தொடர்ந்து வெளியீடுகள் செய்ய இயலவில்லை.
இசைத் துறையில் தங்களுக்கு ஏதாவது பட்டங்கள் கிடைத்ததுள்ள்தா?
பல வருடங்களுக்கு முன்பு உலக மேதை சுத்தானந்த சுவாமிகள் "இசைமணி" என்ற பட்டம் வழ்ங்கி கவுரவித்தார். திருச்சி தமிழ் இசை சங்கம் 'தமிழ் இசைவேந்தன்' என்ற பட்டம் தந்தனர். மற்றபடி அரசின் எந்த பட்டங்களும் எனக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக அடையாளம் கண்டு கவுரவிக்கப்படவும் இல்லை.
இசையைப் பற்றி?
இறைவனே இசை வடிவம் தான்.இசைக்கு உடலை வருத்த தேவையில்லை. அமைதியான சூழலில் மனதை ஒரு நிலைப் படுத்தி நல்ல தமிழ் இசைப் பாடல்களைகேளுங்கள். உங்கள் வேலை பளுவுக்கிடையே பாடல்கள் கேட்பதை பழகிக் கொள்ளுங்கள். மனதும் புத்துணர்வு பெறும் தமிழ் இசையும் வளரும்.
இன்றைய இசையைப் பற்றி?
இன்றைய இசை கலப்படமாகிவிட்டது
இசையை வளர்க்க இனி என்ன செய்ய வேண்டூம்?
சிறு வயதிலேயே இசை ஆர்வம் அதிகரிக்க பள்ளிகளில் இசையை பாடமாக்கலாம். ஊடகங்களில் மக்களை கவரும் விதத்தில் நல்ல தமிழிசையை ஒலிபரப்பலாம். னல்ல தமிழ் இசைப் பாடல்களை நடை சிதையாத வகையில் குறுந்தகடு, இசைத்தட்டுகள், வெளிவர இசை நிறுவங்கள் முன் வரவேண்டும். நிறைய த்மிழ் இசைக் கல்லூரிகள் துவங்கப்படவேண்டும்.

நேர் காணல்-ஜவஹர்ஜி.