Wednesday, October 15, 2008

அக்டோபர் மாத போட்டிக்கு


இந்தியா ஒளிர்கிறதுன்னு தமிழ் நாட்டையே இருட்டாக்கிட்டாங்க,என்ன செய்ய கரண்ட் வரட்டும்ன்னு காத்திருந்து நாள்களும் போயிருச்சு.


மஞ்ச கலருல பேப்பர் வாங்கிவந்து அதயை டேபில் மேலே விரிச்சு போட்டு பொடிக்குட்டி பிள்ளைக்க கால்லிருந்து ஸூவை கழற்றி வைச்சு அதுக்க மேல அவளுக்க இரண்டு மாலையும் கழற்றி வைச்சு,மக்கா உணக்க அந்த ரெண்டு நெயில்பாலிஸ்‍‍ சையும் தா மக்கா என கெஞ்சி அந்த ஸூவுக்க பக்கத்தில வைச்சி, ரெண்டு லைட்டையும் அந்தபக்கத்திலையும் இந்த பக்கத்திலையுமா வைச்சி,கேமிரா வழியா பாத்தா இந்த விளம்பர படம் தெரிஞ்சிது.கபால்ன்னு கிளிக்கவும்,கரண்ட் போயிருச்சு.


தெக்கல்லாம் இப்ப பூதா இருட்டுதான்.

Monday, September 22, 2008

நெஞ்சு பொறுக்குதில்லையே

சின்ன வயசில் நெல்லையிலிருந்து குமரிக்கு பஸ்சில் பயணப்படும்போது ஜன்னல் வழியே சாலையை பார்த்து நான் ரசிப்பது எதிர் திசையில் ஓடிக்கடக்கும் மிகப்பெரிய மரங்களை கண்டு.
வழிநெடுக சாலையின் இரு பக்கங்களிளும் பெரிய‌பெரிய ஆலமரங்களும் அதன் நீண்ட விழுதுகளும்,தூரத்திலிருந்து பார்த்தால் குகையை கடந்து செல்வது போல இருக்கும். மரங்களின் விழுதுகள் மீது பஸ்சின் மேல் பக்கம் உரசி செல்வதால் கத்தரிக்க பட்ட பெண்களின் கூந்தல் போல அழகாக காட்சியளிக்கும்.
பஸ் பயணத்தின் போது வரலாற்று ஆசிரியர் சொல்லி தந்த பாடம் என் மனதில் படமாக காட்சிவிரிக்கும்.அசோகர் சாலையோரங்களில் மர‌ங்களை நட்டார்.மன்னர் தனது குதிரை வண்டியில் புடைசூழ பயணப்படுவது போலவும்,சோலையாக காட்சியளிக்கும் மரநிழ‌லில் மன்னர் ஓய்வெடுப்பது போலவும்,அடர்ந்த மரகிளைகளின்வூடே பொத்தல் பொத்தலாக வழிந்து வீழும் ஒளிகீற்றுகள் மன்னரும் அவரது பரிவாரங்களும் உடுத்தியிருக்கும் பட்டாடைகள் மீது ஒளிக்கதிர்களாக‌ பட்டு ஜொலிர்ப்பதையும் மனக்கண்ணில் பார்த்து லயித்துபோயிருக்கிறேன்.
ச‌மீப‌த்தில் கும‌ரியிலிருந்து வ‌ள்ளியூருக்கு பைக்கில் ப‌ய‌ண‌ப்ப‌ட்டேன்.மிக‌வும் அதிர்ச்சியாக‌ இருந்த‌து சாலை விரிவாக்க‌த்திற்காக‌வும் நால்வ‌ழி சாலைக்காக‌ வ‌ழிநெடுக‌ ஓங்கிவ‌ள‌ர்ந்த‌ அத்த‌னை பெரிய‌ விருச்ச‌ங்க‌ளையும் வெட்டி விழ்த்தியிருந்த‌ன‌ர்.ம‌ர‌த்தின் கொண்டை வெட்ட‌ப‌ட்டு முண்ட‌மாக‌ ப‌ல ‌ம‌ர‌ங்க‌ள்‌ ப‌ரிதாபாமாக‌ நின்ற‌ன‌.வீழ்ந்துகிட‌ந்த‌ ம‌ர‌ங்க‌ளுக்கெல்லாம் நூறு வ‌ய‌துக்கு மேல் இருக்கும் , க‌ரையான் அரித்து திர‌கித்து போய்கிட‌ந்த‌து.ஆத்திர‌ அவ‌ச‌ர‌த்திற்கு ஒதுங்க‌ நிழ‌லும் இல்லை, சாலை முழுக்க‌ பொட்ட‌ல் காடாக‌ கிட‌க்கிற‌து.


வழியில் ஆர‌ல்வாய் மொழி வ‌ன‌ச்ச‌ர‌க‌ செக்போஸ்ட் ஒன்று உள்ள‌து அந்த பகுதியிலும் மரங்கள் வெட்டப்பட்டு வீழ்ந்துகிடக்கிறது. அத‌ன் அருகே ஒரு அறிவிப்பு ப‌ல‌கையும் மாட்டி வைத்துள்ள‌ன‌ர்.அதை ப‌டிக்க அதில் உள்ள வாசகங்கள் என‌க்கு வேடிக்கையாக‌ ப‌ட்ட‌து. "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை எண்ணி" என் விழ்ந்து கிடந்த மரங்களை கடந்து சென்றேன்.
பள்ளிப்பருவத்தில் நெல்லை வண்ணாரப்பேட்டை நெடுஞ்சாலையில் மண்ணை கால்களால் தட்டி புழுதி பறக்க வைத்து ரசித்துக்கொண்டே நடந்ததும், அந்த சாலையோரத்தில் உயர்ந்த நாவல் மரங்களும் அதிலிருந்து வீழ்ந்து கிடக்கும் நாவல் பழங்களும் மண்களை ஊதி துடைத்து தின்ற பின்பு கைகளிளும் வாயிலும் ஊதா நிறமாக மாறியிருக்கும், வாகைமரத்தில் நீண்ட சாட்டை சாட்டையாக தொங்கும் விதையின் மீது தலைகீழாக தொங்கிகொண்டே விதைகளை கொறித்து துப்பும் கிளிகளையும்,ஆலமரவிழுதுகளை க‌ர‌ங்க‌ளால் இருக‌ ப‌ற்றிக்கொண்டு விழுதுக்கு விழுதுக்கு தாவி கொக்கிரகுளம் வரை தாவும் குரங்குகளும். இன்று வரை என் மன‌ நினைவகங்களில் பசுமயையான காட்சிகளாகும்.
பூமி அதிக ‌வெப்ப‌ம‌டைவ‌தால் ம‌ர‌ங்க‌ளை ந‌டுங்க‌ள், வ‌ன‌ங்க‌ளை பாதுகாப்போம் என‌ உல‌க‌ அள‌வில் அறிவுறுத்தப்‌ப‌டுகிற‌து. இங்கே ஒரு ப‌க்க‌ம் ப‌த‌றுக‌ளைப்போல மரங்கள்‌ வெட்டி வீழ்த்தப்‌ப‌டுகிற‌து.
திரும‌ண ‌வீடுக‌ளில் ப‌ண்டைய‌ கால‌ங்களிலிருந்தே திரும‌ண‌த்தின் இர‌ண்டொரு நாள்களுக்கு முன்பாக‌ சொந்த‌ ப‌ந்த‌ங்க‌ளையெல்லாம் அழைத்து "ஆல‌ங்கால்" ந‌டுத‌ல் என‌ ஒரு வைப‌வ‌த்தை ந‌ட‌த்தி விருந்துண்டு அத‌ன் பின் திரும‌ண‌த்திற்கு பின்பாக‌ அந்த‌ ம‌ண‌ம‌க்க‌ள் நினைவாக‌ஊரின் ஒரு ப‌குதியில் அந்த‌ ஆல‌ங்காலை ந‌ட்டு வைத்து ம‌ர‌ம் வ‌ள‌ர்க்க‌ ந‌ம்மை‌ ப‌ழக்கினார்கள் ந‌ம் முன்னேர்க‌ள்.அறிவார்ந்த‌ அந்த‌ ப‌ழ‌க்க‌மும் தேய்ந்து இன்று ஒரு ஆல‌ம‌ர‌ கிளையை ஒடித்து கொண்டுவ‌ந்து பெய‌ருக்கும் ந‌ட்டு வைத்து தூர‌தூக்கி எரிந்துவிடுகின்ற‌ன‌ர்.மண‌மேடைக‌ளில் ம‌ண‌ம‌க்க‌ள் கைக‌ளால் முளைப்பாரியிடு‌வ‌தையும் ந‌ம‌க்கு ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்தி த‌ந்த‌ன‌ர் ந‌ம் முன்னோர்க‌ள்.அத்த‌னையும் தூக்கி க‌டாசிவிட்டு எந்திர‌ ம‌ர‌ங்க‌ளை வ‌ள‌ர்க்க‌ நாம் சிந்திக்க‌ தொட‌ங்கியுள்ளேம்.
"அருள‌க‌ம்" என்ற இய‌ற்கை பாதுகாப்ப‌க‌ அமைப்பை சேர்ந்த‌ சு.பாரதி தாச‌ன் என்ப‌வ‌ர் இடிந்த‌க‌ரையிலிருந்து தோமையார் புர‌ம் வ‌ரை சுமார் 6 கிமீ சாலையோர‌த்தில் ம‌ர‌ங்க‌ளை ந‌ட்டு வ‌ள‌ர்த்து வ‌ருகிறாம். இவ‌ருடைய‌ இந்த‌ செய‌லும் பாரா‌ட்டுத‌லுக்குரிய‌தாகும்.

Friday, August 8, 2008

கண்ணீர் கரைகள்அலை தொடும் கரையில்


நெடுந்தூரம் பயணம் போனது கால்கள்


ஈரமான மணல்களில்


காலடிகள் அடியில்


பதுங்கி அமிழ்ந்து கொண்டது


ப‌ர‌ந்து விரிந்த‌ ம‌ன‌மென‌


க‌ட‌ல் வெளி தூர‌த்தில்


திற‌ந்தே கிட‌க்கிற‌து


உட‌ல் மீது விசிறி செல்லும்


ஏகாந்த‌ காற்று


அதில் மித‌க்கும்க‌ட‌ல் புறாக்க‌ள்


வ‌ழியெங்கும் கிளிஞ்ச‌ல் ம‌ல‌ர்


தூவிவ‌ர‌வேற்பு


ப‌ட்டு க‌ம்ப‌ள‌ விரிப்பாக‌


க‌ல‌ர் க‌ல‌ர் ம‌ண‌ல் ப‌ர‌ப்பு


அலை ஓர‌த்தில் க‌ட்டி போட்டிருந்த‌


ப‌ட‌கின் அணிய‌ம் அலையின் அசைவில்


த‌லைய‌சைத்து வா வா வென்ற‌து


உய‌ர‌ உய‌ர‌ எழும்பிய‌ அலைக‌ள்


ஓடிவ‌ந்து என் கால்க‌ளை க‌ட்டிக்கொண்ட‌து


க‌ண்ணீர் நுரைக‌ளாக‌
அலைக் க‌ர‌ங்க‌ள்


கால்க‌ளை க‌ட்டிக்கொண்டு ஓ வென‌ அழ‌த‌து
மானிடா... விட்டுவிடு


ம‌ண‌ல்க‌ளை க‌ரைக‌ளில் அள்ளுவ‌தை


விட்டுவிடு வென
ஓடிப்போய்வ‌ளையில் ப‌துங்கிய‌ ந‌ண்டு


என் முக‌ம் பார்க்க‌ த‌விர்த்துக்கொண்ட‌து
திரும்பி பார்க்கிறேன்


அலைக‌ள்


என் கால‌டிசுவ‌டுக‌ளை


அழித்து போட்டுக்கொண்டே


என்னோடு தொட‌ர்ந்து வ‌ருகிற‌து.

Friday, July 11, 2008

இரவு வேளை


இரவு வேளை அது... சென்னைக்கு ஒரு வேலையாக என் நண்பரோடு போயிருந்தேன்.நாங்கள் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியே தெருவிளக்கின் வெளிச்சம் எங்கள் அறையின் உள்பக்கம் விழுந்து கொண்டுருந்தது.இரவில் தூக்கம் வராமல் விழித்து கொண்டுருந்தேன் . நாங்கள் உபயேக படுத்த கொண்டு வந்திருந்த பொருள்களை செருகி வைத்திருந்த‌ மூடியிருந்த ஜன்னலை பார்த்தால் அருமையான சில் அவுட்டாக தெரிந்தது.கிளிக்கி போட்டேன்.

Monday, June 16, 2008

இருளில் நண்பர்கள்.....
பழனி அடிவாரத்தில் உள்ள‌ வீதியில் சைக்கிள் ரிக்சாவில் பயணம் செய்யும் போது, துயரத்தோடு நான் பதிவு செய்தது இந்த படம்.தனி மனிதன் ஒருவனுக்கு உண‌வில்லையெனில் இந்த ஜெகத்தையே அழித்திடுவோம் என்றார் முறுக்கு மீசை கவி. இருப்பினும் பலரும் ஒரு வேளை உணவிற்காக அல்லாடுவதை காண முடிகிறது.எனக்கொரு நண்பர் உண்டு.கடை வீதியில் தான் நாங்கள் முதன் முதலில் சந்தித்தோம்.அழுக்கு உடை தலையில் தலைப்பாகை,வெத்திலை போட்டு காவியேறிய பற்கள்,கண்களில் மட்டும் ஒரு வித தீர்க்கமான ஒளியிருக்கும்.பேச்சிலும் நல்ல தெளிவிருக்கும் இராமாயணம் பற்றியும்,திருக்குறளையும் தனது பேச்சினுடனே மேற்கோள்காட்டியே பேசுவார்.நானும் கலைஞர் கருணாநிதியும் திருக்குவளையில் பிறந்த ஒரே ஊர் காரர்களாக்கும் எனக்கூறி முகம் மலர்வார். நாங்கள் இரவில் தான் சந்திப்போம் காரணம் அவர் பகல் முழுதும் வீதிகளில் சுற்றித்திரிந்து பேப்பர்கள் பொறுக்குவது தான் அவரது வேலை. இரவில் க‌டைவீதியில் பூட்டிய‌ க‌டையின் முன்பு தான் நாங்கள் சந்திப்போம் அதுதான் அவ‌ர‌து விலாச‌ம். வ‌ய‌து 55 இருக்கும் ராஜா என அறிமுக‌ப்ப‌டுத்திக்கொண்டார். பகல் முழுவதும் தான் பொறுக்கிய பேப்பர்களையெல்லாம் காயிலான் கடையில் போட்டு காசாக்கிகொள்வார்.பின்பு ஓய்வெடுக்க கடைவீதீயில் பூட்டிய கடையின் முன்பு வந்து சேர்வார் அவர் வரும் போது மணி இரவு 10 ஆகிவிடும் எப்போதும்.அன்றாடம் நானும் அவரை தவறாமல் பார்ப்பதை வழக்கமாக்கிகொண்டேன் இரண்டொரு வார்த்தைகள் அவரிடம் பேசினால் தான் ஒரு வித மன நிறைவு எனக்கு.ஒரு நாள் சினிமா பற்றி வெகு நேரம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம் "பிரிவோம் ச‌ந்திப்போம்" படம் பற்றிய பேச்சு வந்தது, அவருக்கு அந்த படம் மிக பிடித்திருந்தாக கூறினார். நான் அந்த படம் பார்க்காதனால் அதை பற்றி எனக்கு ரொம்ப பேச முடியவில்லை எனவே அதை நான் கட்டாயம் பார்க்கவேண்டும் என அன்பு கட்டளையிட்டார் எனக்கு.பின்பு படத்தை பார்த்த பின்பு நானும் அவரும் ஒரு நாள் இரவில் வெகுநேரம் பிரிவோம் ச‌ந்திப்போம் படத்தை பற்றி பேசி பிரிந்தோம்.சினேகாவின் கேரக்டரை சிலாகித்து பேசினார்,உறவுகளை தொலைத்த அவருக்குள் உறவுகளை தேடுவதை என்னால் உணர முடிந்தது.ஏன் ராஜா ஐயா உங்க குடும்பத்தாரோடு போய் சேர்ந்து வாழவேண்டியது தானே என்றேன் இமையோரம் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு,இந்த அழுக்கு கிழவன் என்றோ தேவையில்லை என‌ ஆகிவிட்டது என்று வற‌ட்டு பெருமூச்சு விட்டார். பிறகொரு நாள் இரவில் அவரை போலீஸ் பிடித்து போனதாகவும்,கையில் வைத்திருந்த 25ரூபாயை பிடிங்கி கொண்டு கடைவீதியில் இனி படுக்ககூடாதென விரட்டிவிட்டதாக‌ வருந்தினார். இதல்லாம் அடிக்கடி நடக்ககூடியவைதான் என அவரே ஆசுவாசபடுத்திக்கொண்டார். அன்று அவர் இர‌ண்டு உண‌வு பொட்ட‌ல‌ங்க‌ளை ஒரு பையிலிருந்து வெளியே எடுத்து வைத்தார் என்னிட‌ம் ப‌ல‌தும் பேசிக்கொண்டிருந்தார்,நான் ஐயா சாப்பிட‌வேண்டிய‌துதானே என்றேன்.வ‌யிறு ப‌சிக்குது ஆனா அந்த‌ ப‌ய‌ல‌ காண‌லையே என‌ அந்த‌ இருட்டில் யாரையோ தேடினார். சிறிது நேர‌த்தில் எண்ணையே காணாத‌ க‌லைந்த‌ த‌லையுட‌ன் அழுக்கு பேண்ட் அணிந்த‌ ந‌டுத்த‌ர‌ வ‌ய‌துக்கார‌ர் ஒருவ‌ர் வ‌ந்து சேர்ந்தார்.வாடா பாபு என்ன‌டா இவ்வ‌ளவு நேரம் எங்க‌டா போய் தொலைந்தே என‌ உரிமையோடு க‌டிந்துகொண்டார்.த‌லையை க‌விழ்ந்துகொண்டு ப‌தில் ஏதும் பேசாம‌ல் நின்றார் வ‌ந்த‌வ‌ர், அந்த‌ பொட்ட‌ல‌த்தை எடுத்து அவ‌ரிட‌ம் நீட்டினார். இருவ‌ருமாக‌ சேர்ந்து சாப்பிட்ட‌ன‌ர்.அவ‌ரிட‌ம் வ‌ந்த‌வ‌ரை ப‌ற்றி விசாரித்தேன் பாவ‌ம் இந்த‌ ப‌ய‌ இந்த‌ ஊர்தான் பொண்டாட்டி யார்கூட‌வே ஓடிப்போய்விட்டாளாம் இவ‌ன் ப‌யித்திய‌மாய் திரிகிறான் என்றார்.தின‌மும் அவ‌ருக்காக‌ ஒரு வேளை உண‌வு இவ‌ர் கொடுப்ப‌தை வ‌ழ‌க்க‌மாக‌ வைத்துள்ளார்.இதில் உங்க‌ளுக்கு சிர‌ம‌ம் இல்லையா என‌ கேட்டேன் க‌ல்லுக்குள் உள்ள‌ தேரைக்கே உண‌வளிக்கும் இறைவ‌ன் இருக்கும் போது என‌க்கேது சிர‌ம‌ம் என ராஜா ஐயா புன்ன‌கைத்தார்.சமூகத்தாலும் உறவுகளாலும் துரத்தப்பட்டும், புறக்கனிக்கப்படுகின்ற இவர்களை போன்ற பல ஜீவன்கள் ஏழ்மை,வறுமை,பிணிகள் போன்றவற்றோடு தான் இவர்களது வாழ்க்கை என்றாலும், மனிதநேயத்தோடு குண‌த்தில் உயர்ந்தவர்களாக வீதிகளில் வாழ்கின்ற‌னர்.

Tuesday, May 6, 2008

ஜோடி மே மாத போட்டிக்கு


நம்ம ஊர் பக்கம் பறக்கை என்கிற ஊரில்தான் இந்த ஜோடிகளை பதிவு செய்தேன். இதன் பெயர் Block Winged Stilt இவைகள் பொதுவாக ஆறும் கடலும் கலக்கும் க‌ழிமுக பகுதியில்தான் கூட்டம் கூட்டமாக காணப்படும். அதுபோல ஆழம் குறைவான உப்பளத்தின் நீர்தேக்க பகுதிகளிலும் காணப்படும். உடல் முழுக்க வெள்ளை நிறத்திலும் இறக்கைகள் மட்டும் கருப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்பு. கால்கள் நீண்டு சிவப்பாக இருக்கும். மனிதர்களை கண்டவுடன் உறக்க கீக் கீக் என‌ சத்தம் எழுப்பி கொண்டு அந்த ஏரியா முழுவ‌தும் ஒரு ரவுண்ட் வரும் அதனால் மற்ற பறவைகள் எல்லம் உசரகிவிடும் எனவே இதற்கு லோக்கல் பெயர் ஆள்காட்டி பறவை என்பதாகும். அருகாமையில் உள்ள‌ வ‌ர‌ப்புக‌ளில் புல்வெளிக‌ளில் குச்சிக‌ளை கொண்டு கூடுக‌ட்டி முட்டையிடும். இன‌பெருக்க வேளைக‌ளில் ஆண் ப‌ற‌வை பெண் ப‌ற‌வையை க‌வ‌ர‌ சுற்றி சுற்றி வ‌ந்து பல விதமான‌ டான்ஸ் ஆடும் பாருங்க‌ பிர‌மாத‌மாக‌ இருக்கும். இந்த‌ ப‌ட‌மும் அதைபோன்ற‌ வேளையில் ப‌திவு செய்த‌துதான்.

Friday, May 2, 2008

எழுத்தும் எதிர்நீச்சலும்


நாகர்கோவில் கார்மல் பள்ளி வாளாகத்தில் உள்ள மாதா கெபியின் முன் ஒரு பெரிய கொன்னை மரம் கிளைவிரித்து படர்ந்து கிடந்தது।சித்திரை மாதம் தொடங்கிவிட்டது என்பதின் அடையாளமாக அந்த மரம் முழுவதுமாக‌ மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து தொங்கியது. அதில் உதிர்ந்த பூக்களின் இதழ்களால் அந்த இடம் முழுவதும் மஞ்சள் கம்பளம் விரித்தது போன்றிருந்தது.பொழுதடைய போகும் நேரமான மாலை வேளை அது. நெய்தல் சமூகம் சார்ந்த படைப்பாளர்கள் அந்த மரத்தின் அடியில் காத்துகிடக்கின்றனர், ஆம் அன்று சிறப்பு விருந்தினராக வரயிருப்பது எழுத்தின் மூலம் எதிர் நீச்சல் போட்டுக்கொண்டிருக்கும் அந்த எழுத்தாளர் கவிஞர் ஹச். ரசூல் ஆவார்.


கவிஞர் ரசூல் குறித்த நேரத்தில் வந்து சேர, நெய்தல் படைப்பாளர்க‌ளிடையே உற்சாகம் தொற்றிக்கொண்டதுஅவ‌ர்க‌ள் குழுமி பேச‌ இருந்த‌ அறையில் மின்தடை படவே அறையின் வெளியில் இய‌ற்கை சூழ்நிலையில் ம‌ர‌நிழ‌லில் கூட்டம் தொட‌ங்கிய‌து।நெய்த‌ல் படைப்பாள‌ர்க‌ள் சுமார் 15 பேர்க‌ள் குழுமியிருந்த‌ன‌ர்.சிற‌ப்பு விருந்தின‌ர் அறிமுக‌மும், அதை தொட‌ர்ந்து ப‌ங்கேற்ப்பாள‌ர்க‌ள் அறிமுக‌மும் ந‌ட‌ந்தேறிய‌து.க‌விஞ‌ரின் ப‌டைப்புக‌ளை ப‌ற்றியும்,எழுத்தின் ந‌டையையும் அத‌ன் வீரிய‌த்தையையும் ப‌ற்றி அறிமுகப்ப‌டுத்தினர். எழுத்தாள‌ர் வ‌ரீதையா அவ‌ர்க‌ள். க‌விஞ‌ரை ஊர்வில‌க்க‌ம் செய்திருப்ப‌தை ப‌ற்றி கூறிய‌வுட‌ன் சுவாரசிய‌மும்,அதிர்ச்சியும் தொற்றிக்கொண்ட‌து ப‌ங்கேற்பாள‌ர்க‌ளிடையே.


ர‌சூல் அவ‌ர்க‌ள் அர‌சு அதிகாரியாக‌ புள்ளியில் துறையில் ப‌ணியாற்றுவ‌தாக‌வும்,ம‌னைவி ம‌க்க‌ளோடு த‌க்க‌லையில் வ‌சிப்ப‌தாக‌வும் புன்னகையோடு பேச‌ ஆர‌ம்பித்தார், நெடிய‌ உய‌ர‌மாக‌ உச்சியை ச‌ரித்து வ‌க‌டு எடுத்து சீவியிருந்தார், தான் எண்ப‌துக‌ளில் எழுத‌ ஆர‌ம்பித்ததாக‌வும்,ஆர‌ம்ப‌கால‌ங்க‌ளில் க‌விதைக‌ள் நிறைய எழுதிய‌தாக‌ கூறினார்।எழுத்தாள‌ர்க‌ளின் எழுத்துக்க‌ள் முழுக்க‌ முழுக்க‌ உள்ள‌த்திலிருந்தும் சிந்த‌னைக‌ளையும் க‌ல‌ந்து தான் வ‌டிக்க‌ப்ப‌டுகிற‌து।பார்த்த‌ உண‌ர்ந்து பாதித்த‌ விச‌ய‌ங்க‌ள், நிக‌ழ்வுக‌ள் எழுத்தில் பிர‌திப‌லிக்கும் என்றார்.எழுத்துக்களை வெகுசன மக்கள் மத்தியில் வெளிப்பரப்பில் படிக்கும் போது பல்வேறு அர்த்தங்களோடு புரிந்துகொள்ளப்படுகிறதுதென்றும்,ஆய்வாளர்களால் இன்னொருவிதமாக பகுப்பாய்வு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.இந்தவிதமாக‌ த‌ன்னுடைய‌ ம‌யிலாஞ்சி க‌விதை தொகுப்பில் தான் எழுதிய‌ நிறைய‌ க‌விதைக‌ளை நினைவுகூறினார் ர‌சூல் அவ‌ர்க‌ள்.அவ‌ருடைய‌ ம‌க‌ள் சிறுமியாக‌ ப‌ள்ளி சென்று வ‌ரும் ப‌ருவ‌ங்க‌ளில் ப‌ள்ளியிலிருந்து வீடு வ‌ரும் போது பென்சில் ட‌ப்பாவில் த‌ன் ப‌ள்ளி தோழியின் ஸ்டிக்க‌ர் பொட்டினை எடுத்து வ‌ருவ‌து வ‌ழ‌க்க‌மாம்.அத‌னை ம‌ன‌தில் வைத்து க‌விஞ‌ர் ர‌சூல் ஒரு க‌விதை ஒன்றினை ப‌டைத்துள்ளார்,சின்ன‌ஞ்சிறுமிக‌ளின் உல‌கில் த‌னும் சென்று சிறுமிக‌ளைப்போல் சிந்தித்துள்ளார். "பொட்டு வைத்து அழ‌கு பார்க்க‌ என‌க்கு ஆசை ஆனால் உம்மா திட்டிடுவார்களோ" என‌ கவிதையில் வ‌ரிக‌ளில் குழ‌ந்தையின் ஒரு நிறைவேறாத‌ ஆசையினை எழுதியுள்ளார்। பின்ன‌ர் அது வெகு ச‌ன‌ ப‌ர‌ப்பில் அந்த‌ க‌விதை வ‌ரிக‌ள் ப‌டிக்க‌ப்ப‌ட்டு இவ‌ர் முஸ்லிம் பெண்க‌ளை பொட்டு வைக்க‌ சொல்கிறார் என‌ அர்த்த‌ ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தாம்।அது போல இன்னொரு கவிதையில் சின்ன‌ஞ்சிறுமிக்கு அவ‌ளின் த‌ந்தை ந‌பிகள் நாய‌க‌த்தை ப‌ற்றி சொல்லி வ‌ருகிறார் மிகுந்த‌ ப‌க்தியோடு க‌தைகேட்டு வ‌ருகிற‌ சிறுமி த‌ன் த‌ந்தையிட‌ம் ஒரு ச‌ந்தேக‌ கேள்வி எழுப்புகிற‌து "வாப்பா இத்த‌னை ஆண் ந‌பிக‌ள் தோன்றியுள்ளார்க‌ளே ஏன் வாப்பா ஒரு பெண் ந‌பி கூடதோன்ற‌வில்லை" என‌ சிறுமியின் பார்வையோடு அந்த‌ க‌விதை எழுதியுள்ளார்,இதுவும் இஸ்லாத்தில் பெண்விடுத‌லை என‌ இவ‌ரின் வ‌ரிக‌ளை உருவ‌க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தாம்।த‌ந்தை வேலைக்கு போய்விட்டு வீட்டுக்குவ‌ருகிறார் வீட்டின் ந‌டுவீட்டில் சின்ன‌ஞ்சிறு சிறுமி த‌ன‌து பொம்மைக‌ளையும், விளையாட்டுப் பொருள்க‌ளையும் வைத்து ம‌கிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டிருக்கிறாள்அவ‌ர் அவ‌ற்றை க‌ட‌ந்துபோகும் போது அவ‌ரின் காலில் ப‌ட்டு ம‌களின் பொம்மை மிதிப‌ட்டு தூர‌த்தில் போய் விழுகிற‌து।இதையும் க‌விஞ‌ர் சின்ன‌ஞ்சிறு குழ‌ந்தையாக‌வே க‌ற்ப‌னை செய்து அந்த பொம்மை சிந்திப்பதுபோல் வ‌ரிக‌ளை வ‌டிக்கிறார் "என‌க்கும் ஒரு உம்மா இருந்திருந்தால் இதுமாதிரி நான் பிற‌ர் கால்க‌ளில் உதைப‌ட்டிருக்க‌வேண்டிய‌து வ‌ந்திருக்காத‌ல்லவா? என‌।இதையும் வெகு சன‌ ப‌ர‌ப்பில் க‌விஞ‌ர் தீவிர‌வாத‌த்தை ஆத‌ரிக்கிறார்‌ என் அர்த்த‌ம் கொள்ள‌ப்ப‌ட்ட‌தாம்.பின்ன‌ர் மாவ‌ட்ட‌ உலாமாக்க‌ளிட‌மிருந்து க‌விஞ‌ருக்கு ப‌த்வா க‌டித‌ம் ஒன்று கொடுக்க‌ப்ப‌ட்டதாம்.அத‌ன் பின் விசார‌ணைக்கு உட்ப‌டுத்த‌ப்ப‌ட்டு அவ‌ரிட‌மிருந்து மன்னிப்பு க‌டித‌ம் எழுதிவாங்கப்ப‌ட்டு, ம‌யிலாஞ்சி க‌விதை புத்த‌க‌ங்க‌ள் திரும்ப‌ பெற‌ப‌ட்ட‌தாம். த‌ன‌து எழுத்துக்க‌ளின் மூல‌ம் த‌ன‌க்கு கிடைத்த‌ அனுப‌வ‌ங்க‌ளை சின்ன‌ முக‌சுழிப்போடு ப‌கிர்ந்துகொண்ட‌ர் க‌விஞ‌ர் ரசூல்.அவ‌ர் த‌ன‌து பேச்சின் போது எழுத்தின் ப‌ல‌ த‌ள‌ங்க‌ளிலும் ப‌ய‌ணித்துவ‌ந்தார்.இள‌ம் ப‌டைப்பாள‌ர்க‌ளுக்கு அவ‌ர‌து பேச்சு மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌வே அமைந்த‌து.அவ‌ர் மிக‌வும் க‌வ‌ன‌மாக‌ பேசிமுடித்தார். கார‌ண‌ம் "ஊர்வில‌க்க‌ம்" ப‌ற்றி அவ‌ர் வாய்திற‌க்க‌வே வில்லை.


நெய்த‌ல் ப‌டைப்பாள‌ர்க‌ளுக்கு ர‌சூல் அவ‌ர்க‌ளின் ப‌டைப்புக‌ளோடும்,அவ‌ரோடும் மிக‌ குறைவான‌ அறிமுக‌மே இருந்தால் ஊர்வில‌க்க‌ம் ப‌ற்றி அறிய‌ மிகுந்த‌ ஆவ‌லாக‌ காண‌ப்ப‌ட்ட‌ன‌ர்।ப‌டைப்பாளர்க‌ளிடையே க‌ல‌ந்துரையாட‌லின் போது ப‌ல‌ கேள்விக‌ளை கேட்டு ர‌சூலோடு உரையாடினார்க‌ள் இருப்பினும் அவ‌ர்க‌ளின் இறுதி கேள்வியாக‌ ஊர்வில‌க்க‌ம் ப‌ற்றியதாக‌வே இருந்த‌து என்ப‌தை உண‌ர‌முடிந்த‌து,


நீண்ட‌தொரு ம‌வுன‌ம் தொட‌ர்ந்த‌து க‌விஞ‌ர் ரசூல் தான் அணிந்திருந்த‌ மூக்குக‌ண்ணாடியை க‌ழ‌ற்றி க‌ண்க‌ளில் க‌சிந்த‌ க‌ண்ணீரை துடைத்துக்கொண்டு ஒரு சின்ன‌ செறும‌லுட‌ன் பேச‌ தொட‌ர்ந்தார்.உண்மையிலே தான் ஊர்வில‌க்க‌ம் ப‌ற்றி பேச‌ த‌விர்ப்பதாக கூறினார்.த‌ன்னுடைய‌ ம‌யிலாஞ்சி தொகுப்பிற்கு த‌ன‌க்கு ஏற்ப‌ட்ட‌ அனுப‌வ‌த்திற்கு பின் தான் க‌விதை எழுதுவ‌தை த‌விர்த்து நிறைய‌ க‌ட்டுரைக‌ள் எழுதிய‌தாக‌ குறிப்பிட்டார். ச‌மீப‌த்திய‌ த‌ன‌து க‌ட்டுரை ஒன்றில் திருக்குரானில் குடியை ப‌ற்றி என்ன செல்ல பட்டிருக்கிறது என்பதை எழுதியிருக்கிறார்,அதாவ‌து இஸ்லாத்தில் குடியை ப‌ற்றி ப‌ல‌ இட‌ங்க‌ளில் செல்ல‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌வும், ஆனால் அத‌ற்கான‌ த‌ண்ட‌னையை ப‌ற்றி எந்த‌ இட‌த்திலும் குறிப்பிடப்ப‌ட‌வில்லை என்ப‌தை எழுதியுள்ளார்.ஹ‌ராம் என‌ ப‌ல‌ செய‌ல்க‌ளையும், அத‌ற்கான‌ த‌ண்ட‌னையும் குறிப்பிடப்ப‌ட்டுள்ள‌து.ம‌து குடிப்ப‌து விதிவில‌க்காக‌ த‌ண்ட‌னைக்குறிய‌தாக‌ திருகுரானில் எங்கும் காண‌க்கூடிய‌தாக‌ இல்லை என‌ க‌விஞ‌ர் ரசூல் மிக ஆணித்த‌ர‌மாக‌ சான்று கூறுகிறார்.
இந்த‌ க‌ட்டுரையும் ப‌த்திரிகை ஒன்றில் பிர‌சுர‌மான‌வுட‌ன் உலாம்களிடையே பெரும் ச‌ர்ச்சையையும்,தான் சார்ந்திருக்கும்.வ‌சித்துவ‌ரும் ஐஞ்சுவ‌ண்ண‌ம் ஜ‌மாத்திலும் பெரும் ச‌ர்ச்சையை கிள‌ப்பி விடப்ப‌ட்டுள்ள‌து.க‌விஞ‌ரிட‌ம் நேர‌டியாக‌வும்,எழுத்து மூல‌மாக‌வும் விசார‌ணை செய்துள்ள‌னர். அவ‌ரும் முறையான‌ அத‌ற்கான‌ விள‌க்க‌ங்க‌ளை அளித்துள்ளார்.அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாத‌ ஐஞ்சுவ‌ண்ண‌ம் ஜ‌மாத் கார‌ர்க‌ள் க‌விஞ‌ரையும் அவ‌ர‌து குடுபத்தின‌ரையும் ஊர்வில‌க்க‌ம் செய்துள்ள‌ன‌ர்.ஜ‌மாத்தில் ந‌டைபெறும் எந்த‌ ஒரு ந‌ல்ல‌து கெட்ட‌ நிக‌ழ்ச்சியிலும் அவ‌ரோ அவ‌ர‌து குடும்ப‌த்தாரோ க‌ல‌ந்துகொள்ள‌முடியாத‌ சூழ்நிலையை ஏற்ப‌டுத்தியுள்ள‌ன‌ர்.க‌விஞ‌ரும் அவ‌ர‌து குடும்ப‌த்தாரும் ஒருவிதமான‌ ம‌ன‌க்குழ‌ப்ப‌த்திற்கு ஆழாக்க‌ப‌ட்டுள்ள‌ன‌ர்.
இதையெல்லாம் ச‌ட்ட‌ப்ப‌டி எதிர் கொள்வ‌தென‌ த‌ற்போது இந்த‌பிர‌ச்ச‌னை வ‌ழ‌க்கும‌ன்ற‌த்தில் உள்ள‌து என‌வும் அவ‌ர் குறிப்பிட்டார்।எழுத்தும் எதிர்நீச்ச‌லும் க‌விஞரோடு உட‌ன் பிற‌ந்த‌வையாகும் இவ‌ற்றையெல்லாம் எதிர்கொள்ளும் திற‌ன் த‌ன‌க்குள்ள‌தாக‌ கூறினார்।த‌ற்போது த‌ன‌து ஊர் ம‌க்க‌ளிடையே த‌ன்னை ப‌ற்றிய‌ த‌ன‌து எழுத்தைப்ப‌ற்றிய‌ தெளிவை ஏற்ப‌டுத்திருக்கும் வித‌த்தையும் தெரிவித்தார்।வெகுச‌ன‌ வெளிப்ப‌ர‌ப்பில்த‌ன‌து இந்த‌ க‌ட்டுரையை ப‌டித்த‌வ‌ர்க‌ள் தெரிவித்த‌ க‌ருத்துக்க‌ள் ம‌ற்றும் த‌மிழ்கூறும் ந‌ல்லுல‌கின் த‌ழிழ் எழுத்தாள‌ர்க‌ள் க‌ருத்துக்க‌ள்,ப‌குப்பாய்வாள‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ள்,க‌டித‌ங்க‌ள்,விமர்ச‌ன‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றையெல்லாம் ஒரு தொகுப்பாக‌ வெளீயீடு செய்துள்ளார்க‌ள்।இந்த‌ புத்த‌க‌ம் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் த‌ன்னை ப‌ற்றிய‌ ந‌ல்லதொரு புரித‌லை உண்டாக்கியுள்ள‌தாக‌ கூறி நீண்ட‌தெரு மூச்சுஎடுத்துக்கொண்டார் .

எழுத்தின் மூல‌ம் எதிர்நீச்ச‌ல் போடும் க‌விஞ‌ர் ர‌சூலின்க‌ர‌ம் ப‌ற்றிய‌ நெய்த‌ல் ப‌டைப்பாளார்க‌ள் தாங்க‌ளும் இந்த‌ எதிர்நீச்ச‌லில் உட‌னிருப்பதாக‌ கூறி க‌விஞ‌ரின் க‌ர‌த்தை இறுக‌‌ ப‌ற்றிக்கொண்ட‌ன‌ர்.

Wednesday, April 16, 2008

பண்ணா1


நெய்தல் நிலம் வேண்டும்

அதில் கொஞ்ச‌மேனும் நீட்டி ப‌டுத்திட‌நிழ‌ல் வேண்டும்
க‌ச்சான் தூர‌லில் ந‌னைந்திட‌ வேண்டும்
ம‌ண‌ல்வெளியில் புர‌ண்டு ச‌ற்றே க‌ண்ய‌ற‌ வேண்டும்
உள்ள‌ கும‌ற‌ல்க‌ளையும்
இற‌க்கி வைத்து ம‌ண்ணின்
ம‌ண‌ம் நுக‌ர்ந்திட‌ வேண்டும்.


பண்ணா1 =க‌ட்டு ம‌ர‌த்தை க‌ட‌ற்க‌ரையில் மூடிவைக்க‌ ப‌ய‌ன் ப‌டும் ஓலை குடிசை

விட்டாச்சு லீவு


பெரிய‌ லீவும் விட்டு
ப‌ள்ளிகூட‌ பெரிய‌ கேட்டில்
பெரிய‌ பூட்டும் போட்டாச்சு
புத்தகமும் கிழிஞ்சு போயி
கிழ‌ங்கு கார‌ன் கொண்டு போனான்
ப‌க‌ல் வெயிலும் எங்க‌ளோடு
மகிழ்ச்சியாக‌ க‌ட‌ல்குளிக்கும்

த‌க்கைம‌ர‌ம் சேர்த்துகெட்டி
ம‌ர‌ம் இள‌க்கி1 விளையாட்டு
க‌ட‌ம‌ர‌மும்2 தேவையில்லை
அணிய‌மும் 3 தேவையில்லை
க‌ம்பாலும்4 தேவையில்லை
சேப்பு வைக்க5 தேவையில்லை
பாய்விரிக்க‌ தேவையில்லை
யாத்தின‌மும்6 தேவையில்லை
ஒம‌லுகூட7 தேவையில்லை
சேக்காளி8 நீங்க‌ ம‌ட்டும்கைகோத்து
வந்தாலே போதுமடா

அலை ம‌டிப்பில் தாவிகுதித்து
த‌லையெல்லாம் ம‌ண‌லாச்சு
அலைக்க‌ரையில் கிளிஞ்ச‌ல்
பொறுக்கிமாலையாக‌ கோர்த்திடுவோம்
பொழுத‌டைய‌ க‌ட‌ல்குளிச்சு
வீட்டுமுத்த‌ம் மிதித்திடுவேம.ம‌ர‌ம் இள‌க்கி1 =கட்டுமரத்தை கடலில் இறக்குவது
க‌ட‌ம‌ர‌மும்2 =க‌ட்டும‌ர‌த்தின் பின்புற‌ம்
அணிய‌மும்३ =க‌ட்டும‌ர‌த்தின் முன்புறம்
க‌ம்பாலும4 = கயறு அல்லது வடம்
சேப்பு வைக்க5 = மரத்தை சேர்த்து கட்டுவது
யாத்தின‌மு6 = தொழில் க‌ருவிக‌ள்
ஒம‌லுகூட7 = பொட்டி பொரிய‌ க‌ட‌வ‌ம்
சேக்காளி8 = ந‌ண்ப‌ர்க‌ள்

வெள்ளை கொக்கு


உறுமீன் வ‌ரும‌ள‌வும்
காத்திருக்குமாம் அந்த‌ கால‌ கொக்கு...
திர‌ண்டு வ‌ரும் அலையும் தாண்டி
கொத்தி பிடித்திடுமாம்
இது இந்த‌கால‌ கொக்கு

ம‌னிதா
துணிவேடு நீயும் எதிற்கொள்
அத்த‌னையும் வ‌ச‌மாகும்உன்ப‌க்க‌ம்....

மென‌க்கெடு1


வனம்போயி அறுத்தெடுத்து

ஓடாவி2 செதுக்கி தந்த கடல் தேரு

பெரும‌டியை 3 சும‌ந்த‌ ம‌ர‌மிது

ஓங்கார‌ காற்றையும் உற‌ப்பான 4 க‌டலையும்

கிழித்து பாயும் ம‌ர‌மிதுஇது

ஒடாத‌ க‌ட‌லுமில்லை

பார்க்காத சேலுமில்லை5

மீன்க‌ளையும் மீன‌வ‌னின்வாழ்வு த‌னையும்

சும‌ந்து வ‌ரும்க‌ட்டும‌ர‌ம்
மித‌ந்து மித‌ந்து களைச்சு போச்சு

இன்றுஇத‌ற்கு ஓய்வு நாளாம்மென‌க்கெடு1 = ஓய்வு நாள்

ஓடாவி2 = க‌ட்டு ம‌ர‌ம் செய்ப‌வ‌ர்

பெரும‌டியை३ = பெரிய‌ வ‌லை

உற‌ப்பான4 = வேகம்

சேலுமில்லை5 = நீரோட்ட‌ம், காற்றின் போக்கு

காத்திருப்போம்


நடுக்கடலில் வலை விரித்த‌பிள்ளைகளுக்கு
சுடும் சூரியனும் குளிர்ந்திடும் நிலவும்
வழித்துணைதான்

ஆழிக்கடலில் ஆர்ப்பரிக்கும் அலையும்
சூரைக்காற்றும் நல்ல‌ தோழன் தான்
நயவஞ்சகன் இலங்கை ராணுவம்
கண் படக்கூடாது

விரித்து வைத்த க‌ன்னி வெடியில்
சிக்கி சிதைந்திடவும் கூடாது
சீறிவரும் துப்பாக்கி தோட்டாவும்
பய்ந்திடவும் கூடாது
பதபதைத்த உள்ளத்தோட‌

கடற்கரையில் தினந்தோறும்காத்திருப்போம்
க‌ண்ணிமைப்போல்க‌ட‌ல் அன்னை

எங்களையும் காத்திட‌ம்மா.

Saturday, April 5, 2008

தனிமை - ஏப்ரல் மாத போட்டிக்கு


இந்த தனிமை ..... மிகக் கொடுமையானது ...
சுனாமியின் போது ப‌திவு செய்த‌து.த‌ன் குடும்ப‌த்தையே அலையின் கோரப் பசிக்கு ப‌லி கொடுத்த‌வள் தனிமையாய் .... பின் புல‌த்தில் அழிந்து போன‌ த‌ன் ஓலை வீட்டின் மிச்ச‌ங்க‌ள். அந்த‌ மூதாட்டியின் க‌ண்ணீர் காட்சிக‌ள் இன்றும் என்னோடு த‌ங்கிபோன‌வை. ஜ‌வ‌ஹ‌ர்ஜி...

Tuesday, April 1, 2008

கரை மடி


குமரி மாவட்ட கடற்கரையோரங்களில் நடைபெறும் மீன்பிடித் தொழிலின் ஒரு வகை தொழில்நுட்பமாகும் கரை மடி என்பது.

வெள்ளன விடியல் பொழுதிலேயே கடற்கரையில் மீனவர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கடற் பகுதியை கண்காணிப்பார்கள்। கடலின் நீரோட்டம் மற்றும் காற்றின் போக்கை கணித்து கொண்டிருப்பார்கள். கடலின் மேற்பரப்பில் மீன்களின் நடமாட்டத்தை கடலின் நிறம் மாற்றத்தின் மூலமாக அறிந்து கொள்வார்கள்.மீன்களின் வரத்து அதிகம் வந்தவுடன், படகில் வலையேடு சிலர் ஏறி கொள்வார்கள் வலையின் ஒரு முனையை கரையில் நிற்பவர்களிடம் கொடுத்துக்கொண்டு வலையை கடலில் விரித்தவாரே ஒரு நீள் வட்ட வடிவமாக படகை செலுத்தி வலையின் மறுமுனைகளை கடற்கரையில் நிற்கும் மற்றவர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார்க‌ள். வலையின் இரு முனை ப‌க்க‌ங்க‌ளிலும் நீண்ட‌ க‌யிறுக‌ளால் இணைக்க‌ப‌ட்டிருக்கும் முனைகளின் ப‌க்க‌த்திற்கு சுமார் 25 மீன‌வ‌ர்கள் வீதம் சேர்ந்து நின்று வ‌லையை ஒரே முக‌மாக‌ புஜ‌வ‌லிமையால் ஒருசேர‌ இழுப்பார்க‌ள். க‌ட‌லில் விரிக்க‌ப‌ட்ட‌ வ‌லையான‌து அதில் அகப்பட்ட மீன்களோடு வ‌ளைந்து கரையை நோக்கி வ‌ந்து கொண்டே இருக்கும்.பொதுவாக‌ இந்த‌ கரைம‌டி க‌ட‌ற்க‌ரையில் செய்ய‌ப‌டுகிற‌து.இதில் அதிக‌ப‌டியான‌ மீன்க‌ள் ப‌டுவ‌தில்லை சாளை,ம‌த்தி, வாளை, நெத்த‌லி,விளைமீன்.வேளாமீன் போன்ற மீன்க‌ள் படுகின்ற‌ன‌.

இந்த‌ க‌ரைம‌டியில் விரிக்க‌ப‌டுகின்ற‌ எல்லா வ‌லைக‌ளிலும் மீன்க‌ள் கிடைப்ப‌தில்லை ப‌ல‌ ம‌ணிநேர‌ வேலையும் உட‌ல் உழைப்பும் வெறுதாய் போவ‌தும் உண்டு இவர்களுக்கு.
கிழக்கு கடற்கரையில் ஏப்ர‌ல் 15 ம் தேதியிலிருந்து 45 நாட்களுக்கு ஆழ்க‌ட‌ல் மீன்பிடித்த‌ல் த‌டை செய்ய‌ ப‌ட்டுள்ள‌து. இந்த‌ 45 நாட்க‌ள் மீன்க‌ள் இன‌விருத்தி கால‌மாகும். இந்த படங்கள் ச‌மீப‌த்தில் கொட்டில்பாடு என்ற‌ க‌ட‌ற்க‌ரை கிராம‌த்தில் ப‌திவு செய்த‌தாகும்.