Friday, October 19, 2007

ஊர் சுத்தலாம் வாங்க!

சமீபத்தில் மதுரைக்கு போனபோது மீனாட்சி அம்மன் கோவிலின் சுற்றுபிரகாரத்தில் கண்ட காட்சி இது...படர்ந்து விரிந்து வளர்ந்திருந்தது. மனிதர்கள் மேல் பயத்தை பாருங்கள்,என்னை வெட்டிவிடாதீர்கள் என எழுதிவைத்திருந்தார்கள். மனிதர்களே பிளீஸ் வெட்டிவிடாதீர்கள்....முடிந்தால் வீட்டுக்கு ஒரு மரம்நட முயற்ச்சிப்போம்.
குமரி மாவட்டத்தில் களியல் நீர் பிடிப்பு பகுதியில் கண்ட காட்சி இது... மீனவர் ஒருவர் சுருக்குவலை கொண்டு மீன்பிடித்த லாவகம்.

நண்பர்களோடு மூணார் போயிருந்தோம்...இரு மரங்களின் உச்சியில் பறவையின் கூடு இது. உயர உயர பாதுகாப்பு மனிதர்களுக்குமட்டும்தான்.


பிரபல பத்திரிகையின் கோலப்போட்டியில் கண்ட காட்சி இது...அந்த காலங்களில் வீட்டின் வாசல்களில் அரிசி மாவுகொண்டுதான் கோலம்மிடுவார்களாம் நம்மவர்கள், காரணம் அரிசி மாவு எறும்புகளுக்கு உணவாக பயன்படும் என்றுதான். அணில்கள் தின்ற இந்த கோலம் எனக்கு பிடித்திருந்தது.


கிராமத்தின் சாலையில் சிறுவர்களின் உற்ச்சாக துள்ளல் ஓட்டம் இது....எல்லா விதத்திலும்இந்த டாப்கியர் ஓட்டமிருந்தால்தான் இன்றைய காலத்தின் நாகரிக வேகத்திற்க்கு ஈடாக இவர்களால் வர இயலும் என மனதில் பட்டது.சாலையில் வேலியில் படர்ந்திருந்த கொடியில் பூத்திருந்த பூ இது... பார்வையில் வானத்திலிருந்து ஒரு பேராசூட் இறங்கி வந்தது போலிருந்தது.திருமண வீட்டில் கண்ட் காட்சியிது.... பள்ளி பாடபுத்தகம் தூக்க வேண்டிய வயதில் சாக்ஸபோண் பிடித்து இசைக்க வந்திருந்தாள், சிறார்பணியாளர் படி குற்றமாகாதா இது!ஒரு பெரிய மாமரம் ஒய்யாரமாக சாய்ந்து படுத்து கிடந்தது ஒரு கல் வீட்டின் மேல்.... சுகமான சுமைபோலும்.ஜன்னல் வழி கண்ட காட்சியிது... குட்டி பூனையை பதுகாப்பாக கவ்வி துக்கி தாவியது தாய்.
கூடன்குளத்திலிருந்து திருச்செந்தூர் போகும் சாலையில் இந்த காட்சியை பதிவு செய்தேன்.....பெண்களின் தலையில் விறகு பாரம், கால்களில் வேகம், இந்த விறகுகள் சமையலுக்கு எரிக்கவா? இல்லை வயிற்று பாட்டை கழிக்க வியாபாரத்திற்காவா ? அணுவுலையிலிருந்து நாட்டுக்கு எரிசக்த்தி கிடைக்கபோகிறதாம்!!! ஆண்டவன் அருள்பாலிக்கட்டும்......அடுத்த நூற்றாண்டில் இந்த கருவேலம் மரங்களாவது மனிதர்களுக்கு மிஞ்சுமா என்று மனதில் கேள்வி எழுந்தது என்னுள்.

Thursday, October 18, 2007

கொலைக்குடில் - பிரமீடு


நதியில் மடி சுரண்டி
மணல் வந்தது


பர்வத உடல்சிதைத்து
கல் வந்தது


வணம் அறுத்து
கதவும் ஜன்னலும் வந்தது


புவித்தாயின் மார்பில்
துளையிட்டு உறிஞ்சியதில்
நீர் வந்தது

வாஸ்த்து படி
வாணம் தோண்டினர்


இறந்துபோன இயறக்கைஉடல்
வின்முட்ட அடுக்கி
புது வீட்டில் கிரகப்பிரவேசம்...

Tuesday, October 9, 2007

வருணப்பொழிவு


தூரத்திலிருந்துபெரும் இரைச்சலோடு
நெருங்கி வியாபித்தது தூறல்
கருத்துபோன மேகங்கள்
தவழ்ந்து கடந்தன


வெளித்தேகத்தில்
மழைத்தூறல்களின் நகக்கீறல்கள்


சிதறிய மழைத்துளி
காற்றோடு உறவாடி அதனோடு
ஓடிப்போனது


கைவிரித்த மழை
முகம் மலர்ந்து
கமலமாக ஸ்பரிசம் கிளரச் செய்தது


செம்மண் தரையில்
சிவந்த ரத்த வழிசல்கள்
வடுக்களைத் தடம் பதித்தன


பூமியில் முகம் புதைத்த
விதைகள் முளைவிட முனைந்தன


நிலம் தழுவி கிடந்த வேர்கள்
இளகிப்போய் வான்நீர் அருந்தின


சருகையும் தளிரையும்
சுத்தமாக கழுவிப் போட்டிருந்தது


கிளைக் கைவீசி
குளிர் சாமரமானது மரங்கள்


உயரத்தில் ஈரக்குருவிகள்
ரெக்கை சிலுப்பி
கண்ணாடித் துகள்களாக சிதறியது


நீர்க்குமிழி கண்சிமிட்டி
தெப்பத்தில் வெடித்து மறைந்தது


அடிவானம் வெள்ளைக்கொடியசைத்து
தூறல் நிறுத்தியது


உதிர்ந்து போன
ஈசல் சிறகுகள் ஊர்வலம் போனது


கரகரத்த தவளை சத்தம்
நிசப்தம் கலைத்தது