வருணப்பொழிவு


தூரத்திலிருந்துபெரும் இரைச்சலோடு
நெருங்கி வியாபித்தது தூறல்
கருத்துபோன மேகங்கள்
தவழ்ந்து கடந்தன


வெளித்தேகத்தில்
மழைத்தூறல்களின் நகக்கீறல்கள்


சிதறிய மழைத்துளி
காற்றோடு உறவாடி அதனோடு
ஓடிப்போனது


கைவிரித்த மழை
முகம் மலர்ந்து
கமலமாக ஸ்பரிசம் கிளரச் செய்தது


செம்மண் தரையில்
சிவந்த ரத்த வழிசல்கள்
வடுக்களைத் தடம் பதித்தன


பூமியில் முகம் புதைத்த
விதைகள் முளைவிட முனைந்தன


நிலம் தழுவி கிடந்த வேர்கள்
இளகிப்போய் வான்நீர் அருந்தின


சருகையும் தளிரையும்
சுத்தமாக கழுவிப் போட்டிருந்தது


கிளைக் கைவீசி
குளிர் சாமரமானது மரங்கள்


உயரத்தில் ஈரக்குருவிகள்
ரெக்கை சிலுப்பி
கண்ணாடித் துகள்களாக சிதறியது


நீர்க்குமிழி கண்சிமிட்டி
தெப்பத்தில் வெடித்து மறைந்தது


அடிவானம் வெள்ளைக்கொடியசைத்து
தூறல் நிறுத்தியது


உதிர்ந்து போன
ஈசல் சிறகுகள் ஊர்வலம் போனது


கரகரத்த தவளை சத்தம்
நிசப்தம் கலைத்தது

Comments