இருளில் நண்பர்கள்.....




பழனி அடிவாரத்தில் உள்ள‌ வீதியில் சைக்கிள் ரிக்சாவில் பயணம் செய்யும் போது, துயரத்தோடு நான் பதிவு செய்தது இந்த படம்.



தனி மனிதன் ஒருவனுக்கு உண‌வில்லையெனில் இந்த ஜெகத்தையே அழித்திடுவோம் என்றார் முறுக்கு மீசை கவி. இருப்பினும் பலரும் ஒரு வேளை உணவிற்காக அல்லாடுவதை காண முடிகிறது.



எனக்கொரு நண்பர் உண்டு.கடை வீதியில் தான் நாங்கள் முதன் முதலில் சந்தித்தோம்.அழுக்கு உடை தலையில் தலைப்பாகை,வெத்திலை போட்டு காவியேறிய பற்கள்,கண்களில் மட்டும் ஒரு வித தீர்க்கமான ஒளியிருக்கும்.பேச்சிலும் நல்ல தெளிவிருக்கும் இராமாயணம் பற்றியும்,திருக்குறளையும் தனது பேச்சினுடனே மேற்கோள்காட்டியே பேசுவார்.நானும் கலைஞர் கருணாநிதியும் திருக்குவளையில் பிறந்த ஒரே ஊர் காரர்களாக்கும் எனக்கூறி முகம் மலர்வார். நாங்கள் இரவில் தான் சந்திப்போம் காரணம் அவர் பகல் முழுதும் வீதிகளில் சுற்றித்திரிந்து பேப்பர்கள் பொறுக்குவது தான் அவரது வேலை. இரவில் க‌டைவீதியில் பூட்டிய‌ க‌டையின் முன்பு தான் நாங்கள் சந்திப்போம் அதுதான் அவ‌ர‌து விலாச‌ம். வ‌ய‌து 55 இருக்கும் ராஜா என அறிமுக‌ப்ப‌டுத்திக்கொண்டார். பகல் முழுவதும் தான் பொறுக்கிய பேப்பர்களையெல்லாம் காயிலான் கடையில் போட்டு காசாக்கிகொள்வார்.பின்பு ஓய்வெடுக்க கடைவீதீயில் பூட்டிய கடையின் முன்பு வந்து சேர்வார் அவர் வரும் போது மணி இரவு 10 ஆகிவிடும் எப்போதும்.அன்றாடம் நானும் அவரை தவறாமல் பார்ப்பதை வழக்கமாக்கிகொண்டேன் இரண்டொரு வார்த்தைகள் அவரிடம் பேசினால் தான் ஒரு வித மன நிறைவு எனக்கு.ஒரு நாள் சினிமா பற்றி வெகு நேரம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம் "பிரிவோம் ச‌ந்திப்போம்" படம் பற்றிய பேச்சு வந்தது, அவருக்கு அந்த படம் மிக பிடித்திருந்தாக கூறினார். நான் அந்த படம் பார்க்காதனால் அதை பற்றி எனக்கு ரொம்ப பேச முடியவில்லை எனவே அதை நான் கட்டாயம் பார்க்கவேண்டும் என அன்பு கட்டளையிட்டார் எனக்கு.பின்பு படத்தை பார்த்த பின்பு நானும் அவரும் ஒரு நாள் இரவில் வெகுநேரம் பிரிவோம் ச‌ந்திப்போம் படத்தை பற்றி பேசி பிரிந்தோம்.சினேகாவின் கேரக்டரை சிலாகித்து பேசினார்,உறவுகளை தொலைத்த அவருக்குள் உறவுகளை தேடுவதை என்னால் உணர முடிந்தது.ஏன் ராஜா ஐயா உங்க குடும்பத்தாரோடு போய் சேர்ந்து வாழவேண்டியது தானே என்றேன் இமையோரம் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு,இந்த அழுக்கு கிழவன் என்றோ தேவையில்லை என‌ ஆகிவிட்டது என்று வற‌ட்டு பெருமூச்சு விட்டார். பிறகொரு நாள் இரவில் அவரை போலீஸ் பிடித்து போனதாகவும்,கையில் வைத்திருந்த 25ரூபாயை பிடிங்கி கொண்டு கடைவீதியில் இனி படுக்ககூடாதென விரட்டிவிட்டதாக‌ வருந்தினார். இதல்லாம் அடிக்கடி நடக்ககூடியவைதான் என அவரே ஆசுவாசபடுத்திக்கொண்டார். அன்று அவர் இர‌ண்டு உண‌வு பொட்ட‌ல‌ங்க‌ளை ஒரு பையிலிருந்து வெளியே எடுத்து வைத்தார் என்னிட‌ம் ப‌ல‌தும் பேசிக்கொண்டிருந்தார்,நான் ஐயா சாப்பிட‌வேண்டிய‌துதானே என்றேன்.வ‌யிறு ப‌சிக்குது ஆனா அந்த‌ ப‌ய‌ல‌ காண‌லையே என‌ அந்த‌ இருட்டில் யாரையோ தேடினார். சிறிது நேர‌த்தில் எண்ணையே காணாத‌ க‌லைந்த‌ த‌லையுட‌ன் அழுக்கு பேண்ட் அணிந்த‌ ந‌டுத்த‌ர‌ வ‌ய‌துக்கார‌ர் ஒருவ‌ர் வ‌ந்து சேர்ந்தார்.வாடா பாபு என்ன‌டா இவ்வ‌ளவு நேரம் எங்க‌டா போய் தொலைந்தே என‌ உரிமையோடு க‌டிந்துகொண்டார்.த‌லையை க‌விழ்ந்துகொண்டு ப‌தில் ஏதும் பேசாம‌ல் நின்றார் வ‌ந்த‌வ‌ர், அந்த‌ பொட்ட‌ல‌த்தை எடுத்து அவ‌ரிட‌ம் நீட்டினார். இருவ‌ருமாக‌ சேர்ந்து சாப்பிட்ட‌ன‌ர்.அவ‌ரிட‌ம் வ‌ந்த‌வ‌ரை ப‌ற்றி விசாரித்தேன் பாவ‌ம் இந்த‌ ப‌ய‌ இந்த‌ ஊர்தான் பொண்டாட்டி யார்கூட‌வே ஓடிப்போய்விட்டாளாம் இவ‌ன் ப‌யித்திய‌மாய் திரிகிறான் என்றார்.தின‌மும் அவ‌ருக்காக‌ ஒரு வேளை உண‌வு இவ‌ர் கொடுப்ப‌தை வ‌ழ‌க்க‌மாக‌ வைத்துள்ளார்.இதில் உங்க‌ளுக்கு சிர‌ம‌ம் இல்லையா என‌ கேட்டேன் க‌ல்லுக்குள் உள்ள‌ தேரைக்கே உண‌வளிக்கும் இறைவ‌ன் இருக்கும் போது என‌க்கேது சிர‌ம‌ம் என ராஜா ஐயா புன்ன‌கைத்தார்.



சமூகத்தாலும் உறவுகளாலும் துரத்தப்பட்டும், புறக்கனிக்கப்படுகின்ற இவர்களை போன்ற பல ஜீவன்கள் ஏழ்மை,வறுமை,பிணிகள் போன்றவற்றோடு தான் இவர்களது வாழ்க்கை என்றாலும், மனிதநேயத்தோடு குண‌த்தில் உயர்ந்தவர்களாக வீதிகளில் வாழ்கின்ற‌னர்.

Comments